செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட வாய்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து, மத்திய அரசின் கருத்தை கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் கடிதம் மற்றும் சட்டத் தகவல்களை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ரோஸ்தஹி தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

அவர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு நாளை தனது முடிவை அறிவிக்கும் என கூறப்படுகிறது. சிறையில் உள்ள 7 பேரில், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால், முதல்கட்டமாக அவர்களை விடுவிப்பது தொடர்பாக மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள மற்ற நால்வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 7 பேரையும் விடுவிக்க காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது.

இதனிடையே, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரையும் விடுவிப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடமும் மத்திய அரசு கருத்து கேட்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

n10