பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பின்படி, மத்திய அரசின் கருத்தினை தெரிவிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், சிபிஐ விசாரித்ததால் மத்திய அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக தமிழக அரசு முடிவு எடுக்க முடியாது என கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




