பேரவையினதும், மாகாணசபையினதும் யோசனைகளை கூட்டமைப்பு பரிசீலிக்கும்: சிவசக்தி ஆனந்தன்
தமிழ் மக்களினுடைய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக்காண வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் பேரவையினாலும், வடமாகாணசபையினாலும் தனித்தனியே முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்ட யோசனைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்:
நீண்டகாலமாக தமிழ் மக்கள் தமக்கான தீர்வு என்ன என்பதை முழுமையாக கூறவில்லை என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக பிரதம மந்திரி அவர்களும் முக்கிய அமைச்சர்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன? என்பதை முன்வைக்கவில்லை என்று குறைகூறியுள்ள நிலையில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகவும் வடமாகாண முதலமைச்சராகவும் திகழும் கௌரவ க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற தீர்வுத்திட்ட யோசனைகளை நாம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டிய நேரம் வந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதன்போது, கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தமது பிரதேசங்களின் குறைகளையும் தேவைகளையும் முன்வைத்தனர்.
நீண்ட காலமாக மிகவும் மோசமாக சேதமடைந்துள்ள போக்குவரத்து பாதைகள் புனரமைத்து தரப்பட வேண்டும்.
மல்லாவி பொலிஸ் நிலையத்தின் காணியில் ஒரு பகுதியை (மூன்றரை ஏக்கர்) பிரதான பஸ் நிலையத்துக்குப் பெற்றுத்தர வேண்டும்.
மல்லாவி சந்தை கட்டடத்தொகுதியில் ஏற்கனவே சந்தையில் கடை வைத்திருந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
மல்லாவி பொலிஸாரின் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆலங்குளம் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி கட்டடம் அமைந்துள்ள ஒரு ஏக்கர் காணியை விடுவித்து தரவேண்டும்.
மத்திய மாகாண அரசுகள் அரச நியமனங்கள் வழங்கும்போது மாவட்ட அடிப்படையில் வெற்றிடங்களுக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
பிரதேசத்தில் குறையாக உள்ள மின்சார வேலைகளை பூர்த்தி செய்து தரவேண்டும்.
மல்லாவியில் ஒரு கலாசார மண்டபம் கட்டித்தரவேண்டும்.
வடமாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அமைக்க வேண்டும்.
மாகாண அமைச்சர்கள் மாவட்டங்களுக்குச் செலவு செய்த பணத்தை மாவட்ட ரீதியாக வெளிப்படுத்த வேண்டும்.
வவுனிக்குளத்திலிருந்து தென்னியங்குளத்துக்கு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் அமைத்து தரவேண்டும்.
பிரதேசத்துக்கான மரண விசாரணை அதிகாரி, துணுக்காய் வலயத்துக்கான நிரந்தரமான வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு முன்னைநாள் தவிசாளர் திரு.தணிநாயகம், உபதவிசாளர் செந்தூரன், அதிபர்கள், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மல்லாவி மனிதநேய இளைஞர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
N5





