பொதுத் தேர்தல் முடிந்ததும் உள்ளூராட்சித் தேர்தல் – ஆணைக்குழு தீர்மானம்!
பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனை கூறியுள்ளது.
2023 உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மீதான மனுக்கள் சம்பந்தமாக 2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தேர்தல் ஆணைக்குழுவினால் உரிய கெளரவத்துடன் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதேபோல், 2024 யூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 2024 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் அதுவரையில் இடம்பெற்று வந்ததன் காரணமாக சனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை நடாத்துவதற்கு ஆணைக்குழு அவசியமான நடவடிக்கைகளை எடுத்தது.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவினால் ஊடக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து மாவட்ட பிரதி/உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுடனும் அரசாங்க அச்சகம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களுடனும் கலந்துரையாடியதை அடுத்து அதற்கு குறைந்தபட்சம் 30-35 நாட்களுக்கு இடைப்பட்ட காலம் தேவைப்படுமென்பது அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில் 2024.09.21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி. 2024.09.24 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்தும் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
ஆகையால், நாட்டின் சட்டவாக்கத்துறைக்கு பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்திற்கு முன்னுரிமையளித்து செயலாற்றுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரிட்டுள்ளது.
அதேபோல், ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு காலப்பகுதியினுள் தீரமானிக்கப்பட்டவாறு பாராளுமன்றத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தினுள் அதாவது 2024.10.26 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடாத்துவதற்கும் நேரிட்டுள்ளது.
இலங்கை மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளைக் காப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு அதன் செயற்பொறுப்பை சிறந்த முறையில் புரிந்துகொண்டு செயலாற்றுவதுடன், 2024 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுடன் இசைந்து சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ள தேர்தல்களை நடாத்தும் செயற்பொறுப்பையும் கவனத்திலெடுத்து பாராளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் ஆணைக்குழு இயன்றளவு விரைவாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை நடாத்துவதற்கு நாள் குறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




