பொதுபல சேனா தலைவர் ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும்: அசாத் சாலி கோரிக்கை
பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களை இழிவாக பேசியமைக்காக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் டியூ. குணசேகர, திஸ்ஸ விதாரண, விமல், வாசு, தினேஷ் ஆகிய ஐவரும் தனியாக போட்டியிட்டு வெற்றியீட்டினால் தான் அரசியலிலிருந்து விலகுவேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு வழங்கிய நிவாரணங்களை வர்த்தகர்கள் வழங்க வேண்டும். அதனை வழங்க மறுத்து விட்டால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இடம்பெற்றதை போன்று அதிகாரத்தை நாங்கள் கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவை போலன்றி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகின்றார். எனினும் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 1,800 வாகனங்களில் 300 வாகனங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிகவும் அதிக பெறுமதி வாய்ந்த வாகனம் மகிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாகவும் இது தொடர்பில் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தமக்கு உரிய இடம் கிடைக்காது என்பதனால் இடதுசாரி தலைவர்களான விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, தினேஷ் குணவர்த்தன மற்றும் டியூ.குணசேகர ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க முனைகின்றனர். குறித்த இடதுசாரி தலைவர்களுக்கு வெற்றி பெற முடியும். எனினும் மஹிந்த ராஜபக் ஷவினால் இனிமேல் பிரதேச சபை தேர்தலில் கூட வெற்றி பெற இயலாது.
குறித்த ஐந்து இடதுசாரி எம்.பி.க்கள் தனித்தனியே போட்டியிட்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் நான் அரசியலிலிருந்து விலகுவேன். மேலும் நுகேகொடையில் எதிர்வரும் 18ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யவுள்ளனர். இக்கூட்டத்திற்கு 57 இலட்சம் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் அக்கூட்டத்திற்கு மக்கள் செல்ல போவதில்லை. அக்கூட்டத்திற்கு 5,000 பேர் வருகை தந்தால் நான் அரசியலிலிருந்து விலகுவதாகவும் சவால் விடுத்தார்.
நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களை அவதூறாக பேசியமைக்காக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும். மேலும், ராஜபக் ஷ குடும்பத்தினால் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் உண்மையான தகவல்களை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.




