செய்திகள்

”பொது வேட்பாளர் தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும்”

பொது வேட்பாளர் தொடர்பில் விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

நெடுந்தீவு குமுதினி படுகொலை நினைவேந்தலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பொது வேட்பாளர் தொடர்பான கோட்பாட்டை அனைவரிடமும் கட்டி எழுப்பி அனைத்து தரப்பையும் ஒன்று சேர்த்து அதன் பின்னர் யார் பொது வேட்பாளர் என்பதை முடிவு எடுக்க தீர்மானித்துள்ளோம்.

கடந்த வாரம் வவுனியாவில் சிவில் அமைப்புகள், மதத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கலந்துரையாடி பொது வேட்பாளர் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதுடன் தமிழர்களுடைய அபிலாசைகளை உலகுக்கு வெளிக்காட்டும் விதத்திலும் தமிழர் வாக்கு தமிழருக்கே என்ற அடிப்படையிலும் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்து தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தென்னிலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமை சார்ந்த தீர்வை வழங்காது என்பதே கடந்த கால வரலாறு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-(3)