பொருளாதார மத்திய நிலைய வாக்கெடுப்பு: விவசாயிகளுக்காக குரல் கொடுத்த முதலமைச்சர் அணிக்கு வெற்றி
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பான வாக்கெடுப்பில் ஓமந்தையில் அமைப்பதற்காக 21 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த இடமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் அமைக்க மத்திய அரசாங்கத்தால் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை அமைப்பதற்கான இடத் தெரிவு தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பநிலை காணப்பட்டிருந்தது.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிறிதரன், சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் விவசாயிகளின் நலன்கருதி ஓமந்தையில் அதனை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
மறுமுனையில், மத்திய அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவமோகன், சரவணபவன் உள்ளிட்ட சிலர் தாண்டிக்குளத்தில் அதனை அமைக்க வேண்டும் என கோரி வந்தனர். இந்த முரண்பாடு காரணமாக குறித்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் அண்மையில் கூடி ஆராய்ந்திருந்தனர். வடமாகாண சபை ஆளுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் வடபகுதி கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஒப்புதல்களைப் பெற்று அதிக படியானோர் விரும்பும் இடத்தில் இதனை அமைப்பதாக அதில் தீர்மானிக்கப்பட்டு அதற்கான வாக்களிப்புக்கு காலவெடுவும் விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வாக்களிப்புக்கான விண்ணப்பத்தை முதலமைச்சர் பதிவு தபால் மூலம் வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் 30 பேருக்கும், கூட்டமைப்பின் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கும் அனுப்பியிருந்தார். இன்று நண்பகலுடன் வாக்களிப்புக்கான நேரம் நிறைவடைந்துள்ள நிலையில் ஓமந்தைக்கு சார்பாக 21 பேரும், தாண்டிக்குளத்திற்கு சார்பாக 5 பேரும் வாக்களித்துள்ள நிலையில் 14 பேர் வாக்களிக்கவில்லை. இதன்படி விவசாயிகள் சார்பாக குரல் கொடுத்த முதலமைச்சர் அணி வெற்றி பெற்று ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க இடம்வழங்கப்படவுள்ளதாக முதலமைச்சர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
N5




