பொருளியியல் தளம்பலும் தமிழர்களும்

சிவா செல்லையா
தற்போதைய பொருளாதார தளம்பல் நிலையில் தமிழ் இளைஞர்களை போராடத் தூண்டுவது மிகவும் தவறான செயலாகும். அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக தமிழ் இளைஞர்களைப் பலிக்கடா ஆக்கக் கூடாது. பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை இராணுவ அடக்குமுறை என மூன்று வகையான பிணக்குகளுக்கு ஊடாகவே தமிழ்மக்கள் வாழ்கின்றனர். எனவே பொருளாதாரப் பிரச்சினையை மட்டும் கருத்தில் கொண்டு தற்போது மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றினால் அவை எமது கடந்த 30 வருடகால முரண்நிலைக்கு பின்னே நகர்த்தி விடும். எனவே நாம் சாதுரியமாக எமது பொருளாதாரப் பிரச்சினைகளை அணுகவேண்டும். மக்களை அச்சப்படுத்தி அரசியல் செய்வது தவறாகும்.
மேலும் இந்திய ரூபாயினை எமது பண்டமாற்றத்தில் பயன்படுத்துவதனால் தமிழர்களது பொருளாதாரம் அழியாது பாதுகாக்கப்படும். கடந்த யுத்தகாலத்தில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இந்தியாவில் இருந்து படகுமூலம் கொணர்ந்தது போல் தற்போதும் சுமார் 30 நிமிடத்தில் எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கை அரசு கோடிக்கணக்கான பணத்தினை 2008 – 2009 வன்னிப் போரிற்கும் அதன்பின் வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிலைநிறுத்தவுமே பயன்படுத்தியது. எனவே தற்போதைய சிங்கள மக்களின் போராட்டத்தில் நாம் விலகி இருத்தல் அவசியமானதாகும்.


