செய்திகள்

பொறிமுறை அமைக்கப்படும்போது எமது நிலைப்பாடு அறிவிக்கப்படும்: கூட்டமைப்பிடம் அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை , மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போது சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தமது பங்களிப்புக்கள் தொடருமெனவும் உறுதிபடக் கூறியுள்ளது.
91
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜங்க செயலாளர் நிஸா பிஸ்வால், ஜனநாயகம், மனித உரிமை தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோருக்கும், எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.

இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,

ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர் நடைபெற்றவரும் விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டது. விசேடமாக அரசியல் சாசனத்தை உருவாக்கும் விடயம் அதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
92
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதபிமானச் சட்ட மீறல்கள் குறித்த அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக நீண்ட உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம், இலங்கையில் காணப்படும் அரசியல் கட்சிகள் வெற்றி காண்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக அமெரிக்காவினது உதவிகளும் தொடர்ந்தும் காணப்படும் என எமக்கு உறுதியளித்துள்ளனர் என்றார்.
93
அதேநேரம் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படும் போது சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் பங்கெடுப்பது தொடர்பாக அரசாங்கம் அண்மைய தினங்கள் உட்பட தொடர்ச்சியாக கூறிவரும் கருத்து தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருக்கின்றது என வினவியபோது அதற்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி,

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத்திற்குள்ளிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருவதை தாம் அவதானித்துள்ளதாக எம்மிடத்தில் இராஜங்க செயலாளர்கள் கூறியிருந்தார்கள்.

பொறுப்புக்கூறல் தொடர்பாக பொறிமுறையொன்று உருவாக்கப்படும் தருணத்தில் நாங்கள்(அமெரிக்கத்தரப்பினர்) அது தொடர்பாக பேசமுடியும். பொறிமுறை அமைக்கப்படும் போது சர்வதேசத்தின் பங்ளிப்பு தொடர்பாக நாங்கள் அறிவிப்போம். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது. எவ்வாறினும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பொறிமுறையொன்று உருவாக்கப்படுவது அத்தியவசியமானது என அவர்கள் எம்மிடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே அரசாங்கத்திலிருந்து வெவ்வேறுபட்ட தருணத்தில் கூறப்படும் கருத்தக்களுக்கு பதிலாக கூட்டமைப்பின் சார்பிலும் கருத்துக்களை வெளியிடுவதால் பயனில்லை என்றார்.

அரசியல் கைதிகள் விடுதலை, பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு ஆகியவை உட்பட புதிய அரசாங்கத்தினது காலத்தில் மக்களின் உடனடிப்பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதில் காணப்படும் கால  தாமதம் குறித்து தெளிவாக அந்த அதிகாரிகளித்தில் எடுத்துரைத்துள்ளோம்.  அதன்போது இவ்விடயங்களை தாம் அறிந்துள்ளதாகவும் தமது விஜயத்தின்போது இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வலியுறுத்தல்களை செய்துள்ளதாகவும் அந்த இராஜங்க செயலாளர்கள் குறிப்பிட்டதாக சுமந்திரன் எம்.பி கூறினார்.

அதேநேரம் புதிய ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். அவற்றை நிறைவேற்றுவதில் அரசாங்கம் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுமாயின் அதற்காக துறைசார் நிபுணத்துவ மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக இலங்கை அரசாங்கத்திடம் உறுதியாக தெரிவித்துள்ளதாகவும் குறித்த இராஜங்க செயலாளர்கள் கூட்டமைப்பிடம் கூறியுள்ளார்கள் எனவும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றமை தொடர்பாகவும், பௌத்த மதத்தை பரப்பும் வகையிலான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பாகவும், இராணுவத்தின் தேவைக்காக தொடர்ந்தும் காணிகள் அடையாளம் காணப்பட்டு திட்டமிட்ட முறையில் சுவீகரிக்கப்படும் நிலைமை முற்றுப்பெறாது இடம்பெற்று வருகின்றமை தொடர்பாகவும் அமெரிக்கத் தரப்பிடம் எடுத்துரைக்கப்பட்டதோடு இவ்வாறான நிலைமைகள் தொடர்கின்ற நிலையில் எவ்வாறு பொதுமக்கள் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை கொள்ளும் வகையிலான சூழல் ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
R-06