செய்திகள்

”போர்ட் சிற்றி” நாட்டுக்கு அழிவை கொண்டு வரும் : ஜே.வி.பி எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திட்டம் நாட்டில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துமெனவும் இதனால் குறித்த திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டுமெனவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
நேற்று பத்தரமுல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர திட்டம் ராஜபக்‌ஷவின் வேலைத்திட்டமாகவே ஆரம்பிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தாம் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துவோம் எனவும் அதற்கு பல காரணங்களையும் கூறினர். குறித்த திட்டத்தால் நிதிப் பிரச்சினைகள் மற்றும் சூழல் பிரச்சினைகள் ஏற்படுமனவும் அத்துடன் வெளிநாட்டு தலையீடுகள் ஏற்படுமெனவும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை நிறுத்தியபோதும் தற்போது அதனை மீள ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்திற்காக 3.4 மில்லியன் கன மீற்றருக்கு கருங்கற்கள் தேவைப்படும். இந்த கற்களை கடுவலை , ஹங்வெல்ல , தெல்கொட , பாதுக்க , திவுலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கையேடுக்கப்பட்டுள்ளது. இதனால் சூழல் பாதிப்பு ஏற்படும். ஆனால் கற்களை பெறுவதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோன்று அதற்காக 1200 இலட்சம் கன மீற்றர் மணலும் தேவைப்படும். இதனால் கடல் மணல் பயன்படுத்தப்படும். இதனால் அந்த மணலை கடலில் பழைய நிலைக்கு கொண்டு வர பல காலங்கள் எடுக்கும். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்தோடு மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இதனால் 5000 வரையான மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடலாம். இவ்வாறாக குறித்த திட்டத்தால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படும். என அவர் தெரிவித்துள்ளார்.  -(3)