மகிந்தவின் அரசியல்
“நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுத்த இந்த அரசாங்கத்தை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அழைப்பு தன்னுடைய அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சியாக மட்டும் இருந்தால் பரவாயில்லை. அவர் தன்னுடைய அரசியலை நடத்திவிட்டுப் போகட்டும் என சும்மா இருந்துவிடலாம். அவருடைய இந்தப் பிரச்சாரம் சிங்களத் தேசியவாதிகளை உசுப்பேத்தி நாட்டில் மீண்டும் ஒரு குழப்ப நிலையை உருவாக்கக்கூடிய இயலுமையைக் கொண்டிருக்கின்றது. போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்கான தடையாக இது அமைகின்றது. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதை தடுப்பதாகவும் அமைகிறது. 30 வருடகாலப் போரின் பின்னரும், நாட்டைப் பழைய இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு மகிந்த ராஜபக்ஷ முற்பட்டிருக்கின்றார் என்பதைத்தான் அவருடைய அரசியல் நிகழ்ச்சி நிரல் வெளிப்படுத்துகின்றது. நல்லாட்சியைத் தருவதாகப் பதவியேற்ற மைத்திரி – ரணில் அரசாங்கமும் மகிந்தவின் இந்த இனவாதப் பிரச்சாரங்களுக்கு அஞ்சிய நிலையில் செயற்படுவது தமிழர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.
இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரையில் இரண்டு செயன்முறைகளை இன்று காணமுடிகின்றது. ஒன்று: புதிய அரசிலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயன்முறை. உண்மையில் புதிய அரசியலமைப்பா அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமா இடம்பெறப்போகின்றது என்பதைத் தெளிவாகச் சொல்லக்கூடிய நிலையில் அரசாங்கத் தரப்பினர் கூட இல்லை. இரண்டாவது: ஜெனீவா தீர்மானத்துக்கு அமைவான விசாரணைப் பொறிமுறை. இது முழுமையான உள்நாட்டுப் பொறிமுறையாக இருக்குமா அல்லது ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்ததிற்கு அமைவான கலப்புப் பொறிமுறையாக அமையப் போகின்றதா என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. இந்த இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முக்கியமானவை. இந்த செயன்முறைகள் மூலமாக தமிழர்கள் எதிர்பார்ப்பவை கிடைத்துவிடுமா என்ற கேள்வி இன்று முக்கியமானதாக எழுகின்றது.
இந்த இடத்தில்தான் மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய அரசியலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றார். ராஜபக்ஷ இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றுடன்தான் செயற்படுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அது புதிதல்ல. ஆனால், அரசாங்கத்தின் போக்கையே மாற்றக்கூடிய அளவுக்கு இயலுமையைக்கொண்டதாக ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரல் அமைந்திருப்பதுதான் ஆபத்தானது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் இலங்கை வந்து சென்றுள்ள பின்னணியிலேயே “நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுத்த இந்த அரசாங்கத்தை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் சிங்களத் தேசியவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். ஜனாதிபதியும், பிரதமரும் அல் ஹுசையினைச் சந்தித்துப் பேசியிருந்தார்கள். மகிந்த அணியினரும் அவரைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கேட்டிருந்தார்கள். ஆனால், வழங்கப்படவில்லை. அவர்கள் தனியான ஒரு கட்சியாக அடையாளப்படுத்தப்படாதது அதற்குக் காரணம். இந்த நிலையிலேயே நாட்டையும் படையினரையும் காட்டிக்கொடுக்கக்கூடிய வாக்குறுதிகளை ஜனாதிபதியும், பிரதமரும் அல் ஹுசையினுக்கு வழங்கிவிட்டார்கள் என அபாயச் சங்கை சிங்கள இனவாதிகளை நோக்கி மகிந்த இப்போது ஊதுகின்றார். அத்துடன் அரசியலமைப்பு மாற்த்தின் மூலமாக சமஷ்டி வழங்கப்படப்போகின்றது, அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையும் அவர் விடுக்கின்றார்.
இவ்வாறு இரு முனைகளில் மகிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் இனவாதப் பிரச்சாரங்களை வெறுமனே அவரது அரசியலுக்கான உபாயம் எனத் தட்டிக்களித்துவிட்டுச் சென்றுவிட முடியாது. மகிந்தவும் அவரது குடும்பத்தினரும், சகாக்களும் இன்று கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டிருக்கின்றார்கள். இதனை வெறுமனே அரசியல் பழிவாங்கல் எனக் காட்டிக் கொள்வதற்கும் தன்னுடைய அரசியல் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டியவராக மகிந்த ராஜபக்ஷ உள்ளார். இன்றைய தினத்தில் அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு அவரிடமுள்ள ஒரேயொரு ஆயுதம் இனவாதம்தான். அதனை எந்த எல்லை வரையிலும் பயன்படுத்த அவர் தயாராக இருப்பதைத்தான் அண்மைக்கால அவருடைய உரைகள் அமைந்திருக்கின்றன. அதன் ஒரு கட்டமாகத்தான் அரசாங்கம் நாட்டையும் போர் வீரர்களான படையினரையும் காட்க்கொடுத்துவிட்டது என்ற பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்துவருகின்றார். நாட்டைப் பாதுகாக்க தான் மீண்டும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் இதன்மூலமாக அவர் வெளிப்படுத்தும் செய்தி!
மகிந்த ராஜபக்ஷவின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் அரச தரப்பின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக அமையப்போகின்றது என்பதுதான் நாம் அவதானிக்க வேண்டிய முக்கிய அம்சம். போர்க் குற்ற விசாரணை தொடர்பில் எவ்வாறான பொறிமுறையை அமைப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் தடுமாறத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. ஜெனீவா (2015 செப்டெம்பர்) தீர்மானத்துக்கு இலங்கையும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. கலப்புப் பொறிமுறை ஒன்றுக்கான பிரேரணையாகவே அது அழைந்திருந்தது. அதனை அரசாங்கம் அப்போது நியாயப்படுத்தியும் இருந்தது. இப்போது ராஜபக்ஷ தரப்பினரின் பிரச்சாரம் மேலோங்கத் தொடங்கியிருக்கும் நிலையில் அந்த நிலைப்பாட்டிலிருந்து அரசாங்கம் சறுக்குவது தெளிவாகத் தெரிகின்றது. உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு சம்பந்தம் இருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடித்துக்கூறிவருவது ராஜபக்ஷ தரப்பின் பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயமாகத்தான் பார்க்க வேண்டும்.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கக்கூடிய இயலுமையைக் கொண்ட பலமானவராக ராஜபக்ஷ இருப்பதை இது உணர்த்துகின்றது. தன்னுடைய அரசியல் அலுவலகம் ஒன்றையும் நேற்று முன்தினம் அவர் திறந்திருக்கின்றார். இதன் மூலம் தன்னுடைய பிரச்சாரங்களை – அரசியல் செயற்பாடுகளை அவர் மேலும் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். இன்றைய நிலையில் இரண்டு கோணங்களில் அவரது அரசியல் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஒன்று: தன்னுடைய குடும்பத்தினர் மீதான விசாரணையை தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலாகக் காட்டிக்கொள்வதன் மூலமாக மக்கள் மத்தியில் அனுதாப அலை ஒன்றை உருவாக்கும் முயற்சி. இரண்டாவது: போர்க் குற்ற விசாரணை மற்றும் அரசியலமைப்பு மாற்றத்துக்கு எதிராக சிங்கள- பௌத்த அடிப்படைவாதிகளை உசுப்பிவிடுதல். இந்த இரு அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே அவரது அரசியல் நிகழ்ச்சி நிரல் அமையவுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கான உபாயங்களைத் தயாரிப்பதற்குப் பதிலாக அந்த நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து ஓடுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்தால், ஆட்சி மாற்றத்தின் மூலமாக எதிர்பார்த்த பலன்கள் எதுவுமே கிடைக்கப்போவதில்லை. அத்துடன், அரசாங்கத்தின் பலவீனத்தையே அது பறைசாற்றுவதாகவும் அமைந்துவிடும். நாம் மீண்டும் பழைய இடத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.
(நன்றி: ஞாயிறு தினக்குரல்)




