மகிந்தவை பாதுகாக்க கோரும் ஐதேக!
ஒரு சில குழுக்கள் ஆயுதங்களைக் கொண்டு மகிந்த ராஜபக்சவை கொல்லக் கூடிய அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இலங்கை அரசால் அவர் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசமைப்பு அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அரசமைப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
அதற்கமைய அமெரிக்காவில் ஜனாதிபதி ஒருவர் பதவிக் காலத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி என அழைக்கப்படுவதில்லை. மாறாக அவர் உயிர் வாழும் வரை பதவி வகித்தல் மற்றும் அதன் பின்னரான நிலைமை ஆகிய இரண்டு மாத்திரமே காணப்படுகின்றது.
எமது நாட்டின் அரசமைப்புக்கமைய ஜனாதிபதியின் பதவிக் காலத்துக்குப் பிறகு அவர்களின் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் நாட்டுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.
னவே, இந்தச் செயல்கள் மூலம் சமூகத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் உருவாக்குவது இலங்கைக்கு நன்மை அளிக்காது. ஜனநாயக நாடுகள் என்றும் முன்னோக்கியே பயணித்திருக்கின்றன.
நேபாளம் போன்ற நாடுகள் இந்த வரலாறுகளைக் கற்றால் தற்போதைய நிலைமைக்கு உகந்ததாக இருக்கும். இலங்கையில் அரசியல் கலவரம் வெடித்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி வகித்தார்.
அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட போதிலும், அவர் பயந்து ஓடவில்லை. மாறாக ஏனையோரது வீடுகள் எரிக்கப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால், நேபாள பிரதமர் அந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்றதாலேயே ஏனையோர் பாதிக்கப்பட்டனர் என்பதே எனது நிலைப்பாடாகும். எனவே, தேசியத் தலைவர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அந்தக் கௌரவம் வழங்கப்பட வேண்டும்” என்றார்.




