மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்: பங்காளிக்கட்சிகள் இன்று பேரணி
பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ போட்டியிட வேண்டுமெனக்கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் இன்று மக்கள் புதன்கிழமை பேரணியொன்றினை நடத்துகின்றன. கூட்டணியில் பொதுபலசேனாவும் பங்காளியாக கலந்து கொள்கின்றது.
பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக் ஷ போட்டியிட வேண்டும் என சுதந்திரக் முன்னணியின் பிரதான பங்காளி கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்ரு ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் கூட்டாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடையில் மக்கள் கூட்டமொன்றும் இடம் பெறுகின்றது.
இதன்போது மகிந்தவுடன் புதிய நாடு, மக்கள் தயாரா? எனும் தொனிப்பொருளில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இப்பேரணியினை நடத்துவதுடன் பொதுபலசேனா பௌத்த அமைப்பினரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும். அதேபோல் தேசிய அரசாங்கம் என்ற கூட்டணி அரசு தொடரக்கூடாது என்பதை வலியுறுத்தியே இக்கூட்டம் இடம்பெறுகின்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பௌத்த அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




