மகிந்த ஐ.தே.க. வுக்கு சவாலாகமாட்டார் : அமைச்சர் கயந்த
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கினாலும் தமக்குச் சவாலாக அமையமாட்டாரென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணதிலக மேலும் கூறுகையில் அண்மையில் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் அரச ஊழியர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்திருந்தார்.
இலங்கையில் 14 இலட்சத்துக்கும் அதிகமான அரச ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் சிலர் மக்கள் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்வதாக பதியப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அரசியல் இலாபம் கருதி தமது குடும்பச் சொத்தாக எண்ணி மக்களின் வரிப்பணம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. இதனை விசாரணைசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் அரச ஊழியர்களை அச்சுறுத்தவில்லை. ஐ.தே.க. ஆட்சியிலேயே அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதென்பது அனைவரும் அறிந்த உண்மை. சிலர் தாம் இழைத்த குற்றங்களை மறைப்பதற்காக மீண்டும் அரசாங்க பலத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது ‘தாம் ஆட்சிக்கு வந்தால், என்று கூறி அரசாங்கத்தை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு மக்கள் இடமளிக்கப் போவதில்லை.குற்றங்களுடன் தொடர்புடைய எவருக்கும் வேட்புமனு இந்த ஆட்சியில் வழங்கப்பட்டாதென்பது உறுதி. அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ களமிறங்கினாலும் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையப்போவதில்லை. குற்றவாளிகளுக்கு வேட்புமனு வழங்குவதா, இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிமையுண்டு. அதில் நாம் தலையிடப் போவதில்லை. ஆனால் மக்கள் ஊழல் இலஞ்ச குற்றங்களுடன் தொடர்பில்லாத ஒழுக்க சீலரையே எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு நல்லாட்சியினூடாக ஏற்படுத்தப்பட்டதொரு விடயம்.
அத்துடன் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கும் மகிந்த ராஜபக்ஷ தனது தொகுதியிலேயே வெற்றி பெறமுடியுமா என்பது சந்தேகத்துக்கிடமான நிலையில் உள்ளது என்றார்.




