செய்திகள்

நெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்

க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

மகிழ்ச்சி… என்ற சொல்லின் மொழிப்பிரவாகமே மகிழ்ச்சியை தந்துவிட்டுப்போவதுபோல் இருக்கின்றது. மனம் நெகிழ்வுற்று கழிப்படைவதில்தான் மகிழ்தலின் சிறப்பே அடங்கியிருக்கின்றது.

நாடு, சமூதாகயக் கட்டமைப்புகள், சமூகம், அரசியல், பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை தொழில் என பல்வேறுபட்ட மன அழுத்தங்களில் ஒவ்வொரு மனித மனங்களும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதே யதார்த்தமான விடயம்.

இந்த அழுத்தங்களுக்குள்ளான மனங்களோ தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன மகிழ்ச்சிகளையும் கொண்டாடுவதற்கு முன்வராமல் இருப்பதுவே பெரும் துரதிஸ்ரமாகும்.

சில மனங்களோ போலியான சந்தோசங்களை வலிந்து ஏற்படுத்திக்கொண்டு அதையும் மகிழ்ச்சியின் அம்சம் என தவறாக புரிந்துகொள்கின்றன.

இன்று பலதரப்பினரிடமிருந்து பெருமூச்சோடும், பல சமூகவலைத்தளங்களில் ஏக்கத்தோடான பதிவுகளாகவும், தமது முன்னையகாலத்தில் கிடைத்த சந்தோசங்களை, நவீன தொழிநுட்பத்தாலும், பணத்தின் மேல் கொண்ட அதீதமான ஈர்ப்பாலும் தொலைத்துவிட்டு மாயமான வாழ்க்கைமுறை வலைக்குள் தெரிந்துகொண்டே விழுந்து கிடக்கின்றோம் என்று புலம்புகின்றனர்.

a-happiness

என்ன ஆச்சரியம் என்றால் நாம் அனைவருமே மகிழ்ச்சியை வெளியே தேடிக்கொண்டிருப்பதுதான்! உண்மையிலேயே மகிழ்ச்சி எங்கே உள்ளது? எது மகிழ்ச்சி என்பதற்கான சரியான பார்வையோ, சரியான சிந்தனைகளோ நம்மிடம் இல்லாமையே மகிழ்தலைத் தொலைக்கும் சமூதாயமாக இன்றைய உலக ஓட்டம் ஓடிக்கொண்டிருப்பதற்கான காரணமாகும்.

குழந்தைகளின் மகிழ்தலை கொஞ்சநேரம் உற்றுப்பாருங்கள், இந்தப்பிரபஞ்சமே தமது சந்தோசத்திற்காகவே படைக்கப்பட்டது என்ற யதார்த்தபூர்வமான உண்மையை புரிந்துகொண்டவர்களாக துள்ளிக்குதிப்பதை பார்க்கலாம். அவர்களின் மகிழ்ந்திருப்பையே மூர்க்கத்தனமாக அடக்கும் பரிதாபகரமான பெற்றோர்களை இன்று  சர்வ சாதாரணமாக பார்க்கக்கூடியதாக இருப்பது இந்த சமூகத்தின் துர்ரதிஸ்ரமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

ஊர்கூடும் திருவிழாக்கள், வீடுகளின் விசேட வைபவங்கள், என்பவை மகிழ்தலை வளங்குவதற்காக உருவாக்கப்பட்டவையே. அயலவர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் என ஒன்றுகூடி அந்த நிமிடங்களை மகிழ்ச்சிக்குரிய நேரங்களாக்குவதற்காகவே இவை கொண்டாடப்படுகின்றன.

அதேபோலதான் சுற்றுலாக்களும்! பெரும்பாலான சுற்றுலாக்கள் தூரத்தை மட்டுமே மையப்படுத்துவதாக உள்ளதே இன்றைய நிலையில் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

ஆனால் உண்மையில் ‘தூரம் எவ்வளவு என்பதை விட அந்த சுற்றுலாவால் மகிழ்ச்சி எவ்வளவு’ என்பதை பிரதானமாக கொண்டால் அந்த சுற்றுலாவால் மனம் மகிழ்தல் எனும் நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.

மகிழ்ச்சி எங்கே உண்டு? என்றால் உண்மையிலேயே மகிழ்ச்சி எமது மனத்திலேதான் உண்டு என்பதே சரியான விடை. எதிலும், இலகிக்காத அல்லல்படும் மனதை எந்த வொரு அழகிய சூழலும் மகிழ்ச்சிக்குரியதாக்கி விடப்போவதிலை.

அதேபோல மனம் மகிழ்தலில் இலகித்துப்போன இதயம் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எதையும், இரசிப்பதையோ, மகிழ்ந்திருப்பதையோ நிறுத்திவிடப்போவதும் இல்லை.

இதனாலேதான் வறுமையால் தாழ்வுற்றபோதிலும், வயிறுமுழுவதும் பசியுடன் இருந்தபோதும் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என ஒரு மகாகவியால் இயற்கையின் வனப்பில் இலகிக்க முடிந்தது.

இரண்டு வாரங்களுக்கு முதல், ஒரு விபத்திலே சிக்கி தனது இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த நபர், மாற்றுக் கண் சத்திர சிகிற்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றார். அது ஒரு தரமான மருத்துவமனை ஆனால் சிறிய மருத்துவமனை. பல்வேறு பட்ட நோயாளர்களும் ஒன்றாகவே தங்கி சிகிற்சை பெறவேண்டியதாக இருந்தது.

Happiness

இரண்டு வாரங்களாக உலகை பார்க்கமுடியாமை அவரை பெரிதும் உடைத்துப்போட்டிருப்பது அவரை பார்க்கும்போதே புரிந்து. நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து ஆயத்தமாகி நான்காவது நாள் சத்திர சிகிற்சை செய்யவேண்டும் என்பது அவருக்கு அந்த மருத்துவமனை தெரிவித்த தகவல்.

மிதமான சீதோஸ்ணத்தில் குளிரூட்டி வருட, தனது கட்டிலில், படுத்திருந்த அவர் ஆவலாக….

எனக்கு அருகில் யாராவது இருக்கின்றீர்களா? எனக்கேட்கின்றார்.

‘ஏனில்லை உங்களுக்கு துணையாக நான் இருக்கின்றேன் எனது பெயர் சாம்’ எதற்கும் கவலைப்படாதீர்கள் நான்கு நாட்களில் நீங்கள் மீண்டும் இந்த உலகத்தை பார்க்கப்போகின்றீர்கள் என பக்கத்து கட்டிலில் இருந்து குரல் வந்தது.

குறுகிய நேரத்திலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களைப்போல இதமாக உரையாடிக்கொள்கின்றார்கள். கண் தெரியாதவர் சாமை நோக்கி எனக்கு இந்த மருத்துவமனைக்கு வெளியே என்ன நடக்கின்றது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கின்றது உங்களுக்கு வெளியே காட்சிகள் தெரிகின்றனவா? என்று கேட்கிறார்.

அதற்கு சாம்.. ஆம் எனது கட்டிலின் இடது புறம் முழுவதும்  பெரிய கண்ணாடி யன்னல் உள்ளது.. இதோ சாலை ஓரம் அழகான பூக்கள் பூத்திருக்கின்றன, இதை கேளுங்கள்.. அங்கே ஒரு குறும்புக்கார சிறுவன் தனது தாயின் கைளை உதறிவிட்டு ஓடுகின்றான். தாயார் அவனை திரத்திக்கொண்டே அவன் பின்னால் ஓடுகின்றார்.

இளம் ஜோடி ஒன்று இருவருக்குள்ளும் காற்றே புகாத அளவுக்கு கட்டிப்பிடித்தபடி செல்கிறார்கள், அனேகமாக புதிதாக திருமணம் செய்தவர்களாக இருக்கவேண்டும்.. என தெரிவித்ததும்.. கண் தெரியாதவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை உற்றுநோக்கி தொடர்ந்தும் மூன்று நாட்களாக வெளியில் தெரிபவற்றை விபரித்தே கண் தெரியாதவரின் கவலைகள் அத்தனையையும் போக்கிவிடுகின்றார்.

மறநாள் கண்சிக்கிற்சை வெற்றிகரமாக செய்யப்படுகின்றது, ஆறு மணித்தியாலங்கள் கழித்து அவரது கண் கட்டு அவிழ்க்கப்படுகின்றது. ஆம்… அவரால் அத்தனையையும் பார்க்கமுடிகின்றது. என்னை நான் தங்கிய இடத்திற்கு அழைத்துப்போங்கள், நான் என் புதிய நண்பன் சாமை பார்க்கவேண்டும் என்று மருத்துவர்களிடம் கூறுகின்றார், அவர் தங்கிய இடத்திற்கு அழைத்துவரப்படுகின்றார். தான் தங்கிய இடத்தை பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி.. அது இரண்டு கட்டில்கள் மட்டுமே இருந்த முழுவதும் மூடப்பட்ட ஒரு அறை…

பக்கத்து கட்டில் காலியாக இருந்தது. சாம் எங்கே என்று மருத்துவரிடம் வினவுகின்றார். மருத்துவரும் இவரது தோழை ஆதரவாக தடவிக்கொண்டே..

சாம் ஒரு புற்றுநோயாளி அவர் தனது இறுதிநாட்களையே இந்த மருத்துவமனையில் கழித்துக்கொண்டிருந்தார், அவரது வாழ்க்கையின் இறுதிப்பொழுதுகள் உங்களுடன் இருந்தது! நேற்று இரவு அவர் காலமாகிவிட்டார் என்றார்.

அத்தனை கொடிய நோய் வலியிலும், கண்ணாடியே இல்லாத அந்த அறையில் இருந்து தனது மகிழ்வுக்காக ஒவ்வொரு விடயமாக கற்பனையில் விமர்ச்சிந்த சாமை நினைத்து அவரது புதிய கண்ணில் இருந்து முதல் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.

நெஞ்சே எழு தொடரும் ….