மக்களிடம் உள்ள துருப்பு சீட்டு யாருக்கு…?
நரேன்-
மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற இருக்கின்ற முதலாவது தேர்தலான உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றது. இழந்த செல்வாக்கை மீள நிலை நிறுத்துவதற்கும், இருக்கும் செல்வாக்கை தக்க வைப்பதற்கும், தமக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் என அரசியல் கட்சிகளும், அரசியல் கூட்டுக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விடயத்தில் தென்னிலங்கை, வடக்கு – கிழக்கு என்ற வேறுபாடின்றி இரு பகுதிகளில் ஒரே விதமான செயற்பாடுகள் நடைபெறுவதையே அண்மைய அரசியல் நகர்வுகளும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றன.
முன்னைய மஹிந்த அரசாங்கம் இழந்த செல்வாக்கை இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் மீள நிலைநிறுத்தும் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. மஹிந்த அணியின் இத்தகைய நகர்வானது தென்னிலங்கையில் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்களை இரண்டுபடச் செய்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. மறுபுறம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சாதகமாகக் கொண்டு ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தன்னை ஸ்திரப்படுத்தி தமது வாக்கு வங்கியை அதிகரிக்க முனைப்பு காட்டியுள்ளது. மைத்திரி – மஹிந்தா இணைவு குறித்தும் பேசப்பட்டு வருவதால், ரணில் தனித்து ஆட்சி அமைப்பது குறித்தும் சிந்தித்து வருவதுடன், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் பெற முயற்சித்து வருகின்றார். இந்த நிலையில் தேசிய அரசாங்கத்திற்கு உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது ஒரு சோதனைக்களமாகவே இருக்கப் போகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலானது நீண்ட இழுபறிக்கு பின்னர் நடைபெற இருக்கின்ற போதும் அந்த இழுபறிக்கு எல்லை நிர்ணயம், தேர்தல் மறுசீரமைப்பு என்பன காரணமாக இருந்தாலும், மறுபுறம் ஆட்சியில் இருக்கும் இரு பிரதான கட்சிகளும் உடனடியாக தேர்தலை விரும்பியிருக்கவில்லை. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாரான நிலையில் இருக்கவில்லை. ஆனால் ஜனாநாயக நாடு ஒன்றில் காலத்திற்கு காலம் தேர்தல் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனால் விரும்பியோ, விரும்பாமலோ அரசாங்கம் தேர்தலை தொடர்ந்தும் நடத்தாது காலத்தை இழுத்தடிக்க முடியாது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. அரசாங்கம் பெற்றுக் கொண்ட கால அவகாசத்தில் ஒரு வருடம் பூர்த்தியாகி அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் தேர்தலை நடத்தாது இனியும் இழுத்தடிக்க முடியாத நிலை இருப்பதால் மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளிலும் முன்னைய தேர்தல்களை காட்டிலும் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலானது அதிக தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை இன்று எதிர்க்கட்சி வரிசையில் இருந்து இணக்க அரசியல் செய்து வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் பல தமிழ் தேசிய இனத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. தமிழ். மக்களின் தலைமையாக தம்மை காண்பித்து மக்கள் ஆணையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் ஆணையைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் முன் தாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து வழிமாறி, தடம் மாறி பயணிப்பதான குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்திருக்கின்றது.
ஆட்சி மாற்றத்திற்காகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்காகவும் வாக்களித்த மக்கள் இன்று தமது அபிலாசைகள் நிறைவேற்றப்படாமையால் தமது அடிப்படை பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து கடந்த 10 மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய மக்களது போராட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மக்களது அபிலாசைகளை அடைவதற்காக அரசாங்கத்துடன் தமக்குள்ள உறவைப் பயன்படுத்தி அந்த பிரச்சனைகளைத் தீர்க்க முயலவில்லை. இதன் காரணமாக தமது தலைமைகள் மீது வெறுப்படைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியோரங்களில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது இரு வேட்பாளர்களுமே இந்த நாட்டில் காணப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறையில் மாற்றம், நாட்டில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சரைனக்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்கான புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும் என வாக்குறுதியளித்திருந்தனர். முதல் இரு விடயங்களும் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் திருத்தங்கள் ஊடாக பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுக்காக மட்டுமே அரசியலமைப்பை கொண்டு வரவேண்டிய நிலையில், தற்போது அந்த அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகி பாராளுமன்றத்தில் விவாதங்களும் நடைபெற்றிருக்கின்றது. அந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகளான வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பன முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை காலமும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த பௌதத்திற்கான முதலிடம், ஒற்றையாட்சி முறைமை என்பன தொடர்ந்தும் நீடிக்கப் போகிறது. இதனை தமிழ் மக்கள் பேரவை, புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள், சட்டவாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், தமிழ் மக்கள் எனப் பலரும் எதிர்த்த நிலையிலும் தமிழரசுக் கட்சித் தலைமை சொல்லாடல்களை பார்க்கக் கூடாது எனவும், அதில் உள்ள உள்ளடக்கமே முக்கியம் என்று சாட்டுப்போக்குகளைக் கூறி ஒன்றுமே இல்லாத அரசியலமைப்புக்காக தமிழ் மக்களது ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளமையும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட போது அதற்காக கொடுத்த விலைகளும் இழப்புக்களும் ஏராளமானவை. அதன்போது நடந்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கூறப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாத நிலையில், அதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியிருந்தது. தமிழரசுக் கட்சி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அழுத்தத்தில் இருந்து காப்பாற்றுவதற்கும், அத்தகைய அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கும் எடுத்த இத்தகைய நடவடிக்கைகள் அந்தக் கட்சிக்கான ஆதரவுத் தளத்தில் தளம்பலை ஏற்படுத்தியிருக்கின்றது.
அத்துடன், தமிழ் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபை மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், தேவையான அபிவிருத்தியை மக்களின் விருப்பப்படி செய்வதற்கும் மத்திய அரசாங்கம் தடையாகவே இருந்து வருகிறது. இருக்கின்ற கொஞ்ச அதிகாரங்களைக் கொண்டு கூட வேலைகளை செய்ய முடியாத வகையில் தமிழரசுக் கட்சி சார்ந்த ஒரு அணி குழப்பத்தில் ஈடுபட்டு மாகாண சபைக்குள் எதிர்கட்சி போன்று செயற்பட்டிருந்தது. வடக்கு அமைச்சர்கள் சிலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வடக்கு முதலமைச்சர் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்த போது தமிழரசுக் கட்சி அரச சார்ப்புக் கட்சிகளுடன் இணைந்து வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடுத்த முயற்சியும், தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளும் அதிருத்தியை ஏற்படுத்தியிருந்துடன், வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன. தமிழரசுக் கட்சியினர் அரசாங்கத்துடன் கைகோர்த்து நடக்கும் நிலையில், தமிழ் மக்களது பிரச்சனைகளை தொடர்ந்தும் உறுதியுடன் வெளிபடுத்தி புதிய அரசியலமைப்பு தொடர்பான திட்ட வரைவு ஒன்றையும், இனப்படுகொலை தீன்மானத்தையும் முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண சபை நிறைவேற்றியிருந்தது. அத்தகைய முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் மேற்கொண்ட இத்தகைய அணுகுமுறை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளியாக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் தமிழரசுக் கட்சி, தன்னிச்சையாகவும் தான்தோன்றித் தனமாகவும் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காது எடுத்து வரும் முடிவுகளும், எடுத்த நகர்வுகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பங்காளிக்கட்சிகள் மட்டத்திலும் முரண்பாடுகளை தோற்றிவித்திருக்கின்றது. இதன் காரணமாகவே ஈபிஆர்எல்எப் கட்சி தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டில் இருந்து வெளியேறி மாற்று அணியை உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. புளொட், ரெலோ ஆகிய பங்காளிக்கட்சிகள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற போதும் அந்தக் கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் உச்ச கட்டத்தை அடைத்திருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பில் ரெலோவும் புளொட்டும் கடுமையாக தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இறுதியாக, வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சித் தலைமைப்பீடத்திற்கும் இடையே அண்மைக்காலமாக முரண்பட்ட கருத்து இருந்து வரும் நிலையில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு பதிலாக வேறொருவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கட்சித் தலைமைப்பீடம் அண்மைக்காலமாக கூறி வருகின்றது. இந்நிலையிலட வட மாகாண சபையின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சி உறுப்பினரான எஸ்.சுகிர்தன் தனது உரையில், ‘முதலமைச்சர் அரசியலில் எங்கோ வளர்ந்து சென்றுவிட்டார். எமது மக்களுக்காக அவர் இனிவரும் காலத்தில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அடுத்த மாகாண சபைக்கு நல்லதொருவர் முதலமைச்சராக வர வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது தனிப்பட்ட ஒருவரது கருத்தாக கொள்ள முடியாது. தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் பீடத்துடன் நெருக்கான உறவில் இருக்கும் மாகாண சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதனால் இதனை தமிழரசுக் கட்சியின் முடிவாகவே கருதவேண்டியுள்ளது. இவரது இந்த உரை மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், பௌத்தமயமாக்கல், திட்மிட்ட குடியேற்றம், மத்திய அரசாங்கத்தின் நிகழ்சி நிரல் என்பவற்றுக்கு தடையாக இருப்பதுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் வடக்கு முதலமைச்சரை அகற்றுவதன் மூலம் வடக்கையும் கிழக்கின் நிலையைப் போன்று மாற்றுவதற்கான முயற்சி இடம்பெறுகின்றதா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
இத்தகைய குழப்பம் நீடித்துள்ள நிலையிலேயே இந்த உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. தென்னிலங்கையில் எவ்வாறு தம்மை நிலைநிறுத்துவதற்காக பிரதான கட்சிகள் போட்டி போடுகின்றனவோ, அதேபோன்று தமிழரசுக் கட்சியின் இழந்த செல்வாக்கை மீளப் பெற்று தனது இருப்பை தக்க வைப்பதற்கும், அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கும் மக்கள் ஆணையைப் பெற வேண்டியிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளால் விரக்தியடைந்து வெளியேறிய ஈபிஆர்எல்எப் அணியும் இந்த தேர்தலில் மக்கள் வழங்கும் ஆணையின் மூலமே தமது வெளியேற்றத்தை நியாயப்படுத்த முயல்கிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் தமது மக்கள் நலன்சார்ந்த தீவிர செயற்பாடுகளுக்கான அங்கீகாரத்தை இந்த தேர்தலில் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த நிலையிலேயே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. தமது அரசியல்வாதிகளின் நிலையறிந்து தமிழ் மக்கள் ஒரு அரசியல் அறிவுபடைத்த மக்களாக செயற்பட வேண்டும். மக்களது ஜனநாயக உரிமையான வாக்குரிமையே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்கும் துருப்பு சீட்டாக இருக்கப் போகிறது.
N5




