மக்களின் எழுச்சிக்கு சி.வி செயல் வடிவம் கொடுப்பது அவசியம்!
நரேன்
கேப்பாபுலவு, பிலவுக் குடியிருப்பு காணிக்காக தொடங்கப்பட்ட போராட்டம் நான்காவது வாரத்தை கடந்துள்ளது. இதற்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் தத்தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனும் வடக்கு? கிழக்கு முழுவதிலும் மக்கள் போராட்டம் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு நீதி வழங்கக் கோரி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் இந்தப் போராட்டங்களின் மீது உரிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அதேசமயம் மக்களின் தன்னெழுச்சியான இத்தகைய அமைதி வழிப் போராட்டங்கள் சர்வதேச சமூகத்தின் கதவுகளை தட்டியுள்ளதுடன், அவர்களின் பார்வை இலங்கையின் மீது ஆழமாக ஊடுருவுவதற்கும் வழிவகுத்துள்ளது. இதற்கு உதாரணமாக ‘ வடக்கு- கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், சமஸ்டி முறையில் அரசியல் அதிகாரங்களை பகிரலாம், வடக்கில் 6 ஆயிரத்து 124 ஏக்கர் காணியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ போன்ற பல்வேறு விடயங்களை வலியுறுத்தி ஐ.நாவின் விசேட நிபுணர் றீட்டா ஐசக் நாடியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளமையை குறிப்பிடலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஒத்தி வைப்பு பிரேரணையின் மூலம் மக்களின் பிரச்சனைகளை எடுத்து சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாக வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் ஒப்புக்காகவேனும் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இணக்க அசியல் செய்து வந்த கூட்டமைப்பு தனது செயற்பாட்டின் ஊடாக நாளாந்த பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியவில்லை என்பதை கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். தென்னிலங்கை மக்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளத்தக்க மொழியில் பேசினால் தான் எமது பிரச்சனைகளை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று தமிழ் தலைவர்கள் தெரிவித்திருந்த நிலையில் மக்கள் தமது அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம், தென்னிலங்கை மக்களுக்கும் போராட்டத்தின் நியாயத்தை உணர்த்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. இது தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகளை வழங்கினால் தென்பகுதியில் கொந்தளிப்பு ஏற்படும் என்ற சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையாளர்களின் போக்கை பொய்ப்பித்துக் காட்டியுள்ளது.
இதனைப்போன்றே, இஸ்லாமியத் தலைமைகள் தமிழ் மக்களுக்கு எதிராக தமது மக்களை திருப்பி விட மேற்கொண்ட முயற்சிகளும் மக்களின் நியாயமான கோரிக்கையினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல மக்களும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அணி திரண்டிருப்பது ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் போராட்டத்தை முன்னின்று வழிநடத்துவதற்கு பதிலாக இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்லியிருப்பது பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்வுகளுக்கு இணையாக சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசிற்கும் தமிழ் மக்கள் படுகின்ற அவலங்களை எடுத்துச் சொல்வதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினால் வடக்கிலும், கிழக்கிலும் எழுக தமிழ் பேரணி நிகழ்த்தப்பட்டது. இதனை புரிந்து கொள்ளாத தமிழரசுக் கட்சியினர் அந்தப் பேரணிகளை கொச்சைப்படுத்தும் வகையிலும், அதனுடன் இணைந்து உந்து சக்தியாக செயற்பட்டவர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தது. இருப்பினும் அந்தப் பேரணிகள் அதீத மக்கள் பங்களிப்புடன் பாரிய வெற்றியை ஈட்டியிருந்தது. மட்டக்களப்பு பேரணிக்கு முன்னதாகவே மக்கள் வீதிகளில் இறங்கி தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். அழுத்த குழுவாக செயற்படுவதாக சொல்லிக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையும், இந்த மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முன்வரவில்லை என்பதும் விமர்சனத்திற்குரியதே.
நாடு விடுதலை அடைந்த பின்னர் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தங்களது பிரச்சனைகளை முன்னிறுத்தி தாமாகவே வீதிகளில் இறங்கிப் போராட தொடங்கியிருப்பதை அண்மைய காலங்களில் அதிகமாக காணக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்கள் முறையான கட்டமைப்பின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டு சரியான திட்டமிடல்களுடன் முன்னெடுக்கப்படுமானால் அவை வினைத்திறன் மிக்கதாக அமையும். ஆனால், தமிழ் மக்களின் உடைய தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து தலைமை தாங்கும் ஒரு தலைமையை காணமுடியாமல் இருப்பது ஒரு பின்னடைவே. போராட்ட களத்தில் இருந்தே தலைமைகள் உருவாகின்றன. அல்லது உருவாகும் என்னும் உலக வரலாற்றை மெய்ப்பிப்பதாகவே மக்கள் போராட்டம் அமைந்திருப்பதையும் காணமுடிகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுய கட்டுப்பாட்டுடனும், தங்களுக்குள் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டும் ஒரு கூட்டுத் தலைமையாக செயற்படுவதைப் பார்க்கும் போது எமது அரசியல் கட்சிகள் இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது.
மக்களின் இத்தகைய போராட்டங்களும் அதன் வடிவங்களுமே கூட்டமைப்பின் தலைவரை மக்கள் புத்திசாலிகள் ஆகிவிட்டார்கள் என்றும் அரசியல் கட்சிகளும் விழித்துக் கொண்டு விட்டன என்றும் சொல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. இணக்க அரசியலின் ஊடாக மக்களது அத்தியாவசியப் பிரச்சனைகளைக் கூட தீர்க்காது மக்களுடன் இணைந்து கூட்டாக ஒப்பாரி வைப்பது என்பது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல. போராட்டங்களுக்கு அதரவு தெரிவிக்கிறோம் என்று சொல்வதும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முனைகின்ற போக்கையே காட்டுகிறது. ஒட்டு மொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களாகிக் கட்சிகளின் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவரும் தமிழரசுக் கட்சியின் சுகபோக அரசியலையே மேற்கொண்டு வருகின்றமையையும் மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தனது வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற போது கூட கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நபர்களையே அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளராக தெரிவு செய்திருப்பதை காணமுடிகிறது.
ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமக்கு இருக்கக் கூடிய ஒரே தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பே என்று மக்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையின் காரணமாகவே அதில் இருந்து விடுபட்டவர்களையும், அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களையும் மக்கள் நிராகரித்து இருந்தனர். கூட்டமைப்பின் பேரால் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டவர்கள் பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியாகவே செயற்படுகின்றனர். பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தமிழரசுக் கட்சி இருக்கின்றமையினால் தமிழரசுக் கட்சியே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தோற்றத்தை வெளிப்படுத்த முனைகிறார்கள். இதன் காரணமாகவே தமிழரசுக் கட்சி கொள்கை முடிவுகளை பங்காளிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கின்றது. இத்தகைய தன்னிச்சையான கொள்கை முடிவுகளும் கூட சரியானதாகவில்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்றத்தில் மௌனம் கலைத்து ஒரு காட்டமான உரையை ஆற்றுகையில், முன்னைய அரசாங்கத்தைப் பேன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார். இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமதர் ஆகியோரை பதவிகளில் அமர்த்துவதற்கு தாமும் முன்னின்று உழைத்தவர் என்பதை ஏற்றுக் கொள்பவர். அவர்களை தன்வழிக்கு கொண்டு வருவதில் அல்லது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்க வைப்பதில் தோல்வி கண்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றச் செயல்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் ஆகியவற்றை விசாரிப்பதற்கு சர்வதேச பொறிமுறையே அவசியம் என்று தமிழ் மக்கள் கோரியிருந்த நிலையில் அதனையொட்டியே ஐ.நா மனிவுரிமை ஆணையாளரும் தீர்மானத்தை வரைந்திருந்திருந்தனர். இந்நிலையில் ஒரு கலப்பு பொறிமுறைக்கு ஆதரவு அளித்து அதனையே நிறைவிற்றுவதில் தமிழரசுக் கட்சி பெரும்பாங்காற்றியிருந்தது. தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத போதிலும் அந்த தீர்மானத்தை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமிழர்கள் உள்ளாகினர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா கூட்டத்தின் போது வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடையக் கூடிய நிலையில் மேலும் கால அவகாசத்திற்கு உடன்பட்டு தமிழரசுக் கட்சி செயற்படுவதாகவே தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவுகளை கூட்டமைப்பின் முடிவாக பேச்சாளர் அறிவிக்கின்ற போதிலும், ஒரு சிலரை தவிர அதற்கு எதிராகவோ அல்லது தங்களுடன் விவாதித்தோ எடுத்த முடிவாகவோ இன்றுவரை தெரிவிக்கவில்லை.
தமிழ் மக்களுக்கு இரண்டு விதமான அனுபவமிக்கவர்கள் கிடைத்துள்ளனர். ஒருவர் அரசியலில் நீண்டகாலம் அனுபவமுள்ளவர். மற்றவர் நீதித்துறையில் நீதியரசராக நீண்டகாலம் பதவி வகித்தவர். தந்தை செல்வாவினால் நேரடியாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் இரா.சம்மந்தன் அவர்கள். நீதித்துறையில் நீதியரசாக ஓய்வு பெற்ற பின்னர் சம்மந்தரால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள். அரசியல் அனுபவஸ்தர் தனது அனுபவத்தின் ஊடாக ஒரு கட்சியை முறையாக கட்டியெழுப்புபி அதனுடாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கட்சியையும் கட்டமைக்கவில்லை, ஒரு கூட்டமைப்பையும் இறுக்கமாக கட்டமைக்கவில்லை. இதன்விளைவாக மக்களை சரியாக வழிநடத்த முடியவில்லை. மறுபுறத்தில் நீதித்துறையில் இருந்து அரசியலுக்குள் திடீர் பிரவேசம் மேற்கொண்டு வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள வடமாகாண முதலமைச்சர் தற்பொழுது மக்களின் பிரச்சனைகளை நன்கு இனங்கண்டு கொண்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை இந்த பிடியில் இருந்து விடுபடமுடியாதவராகவும் மாறியுள்ளார். இதற்கு ஏற்பவே முதலமைச்சரின் அண்மைய செயற்பாடுகளை அவதானிக்க முடிகிறது. சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தொடர்ந்தும் விளக்கமளித்து வருகின்ற முதலமைச்சர் அவர்கள் சிவில் அமைப்புக்களுடனும், பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடனும், புத்திஜீவிகளுடனும், துறைசார் நிபுணர்களுடனும், விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டு எழுச்சியுற்றிருக்கும் மக்களை அணிதிரட்டி உரிமைக்களை வென்றெடுப்பதற்கு முன்வரவேண்டும்.
N5




