மக்களின் போராட்டம் அரசியல் தலைவர்களுக்கு பாடமாக அமையுமா..?
-நரேன்-
கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு மக்கள் பற்றுதியுடன் விரதமாக மேற்கொண்ட 29 நாள் போராட்டம் பெருமளவில் வெற்றியளித்துள்ளது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் ஊடாகவும், மகாணசபைகள் ஊடாகவும் செய்ய முடியாத ஒரு விடயத்தை எந்தகைய இழப்புக்களும் இன்றி தங்களை வருத்திக் கொண்டு அச்சத்திற்கு மத்தியிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். நாட்கள் செல்லச் செல்லத் தான் அந்தப் போராட்டம் வலிமை பெற்றதுடன் அந்தப் போராட்டத்தின் நியாயம் உணரப்பட்டு ஆதரவும் பெருகியது. இங்கு அந்த மக்களின் மனவுறுதியை பாராட்டியே ஆகவேண்டும்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சிங்கள மக்களும் குறிப்பாக பெருமளவு இளைஞர், யுவதிகளும் தென்பகுதியில் இருந்து வருகை தந்து இப் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று தங்களது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தனர். இதனைப் போன்றே தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியான இஸ்லாமிய மக்களும் இளைஞர், யுவதிகளின் பெருமளவு பங்கேற்று இதில் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக சமூகம் இவைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு கல்விச் சமூகமாகவே இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியிருந்தது.
உள்ளூர் பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், ஊடகங்கள், போக்குவரத்து சங்கங்கள், கிராமிய அமைப்புக்கள் எனப் பலரும் வடக்கில் இருந்து மட்டுமல்லாது ஏனைய பகுதிகளில் இருந்தும் கேப்பாபுலவின், புலக்குடியிருப்புக்கு சென்று தமது ஆதரவை வழங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஆதரவாக தத்தமது பகுதிகளிலும், தலைநகரிலும் போராட்டங்களை நடத்தியிருந்தனர். கடந்த ஒரு மாத காலத்தில் இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற ஒரு குக்கிராமம் அதுவும் போரில் பெருமளவு பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புலக்குடியிருப்பு கிராமம் சர்வதேச அளவில் பிரசித்து பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்த மனித குலமும் இலங்கை அரசின் அளுங்கு பிடியைக் கண்டு மனச்சுழித்திருந்தது.
மக்கள் எழுச்சி என்பதும் அவர்களுடைய உறுதியான போராட்டம் என்பதும் எந்தவொரு அரசையும் ஆட்டம் காணச் செய்யும் என்பதையும் புலவுக்குடியிருப்பு மக்கள் நிரூபித்திருக்கின்றனர். இந்தப் போராட்டமும் மக்களின் அணுகுமுறையும் அதற்கு கிடைத்த வெற்றியும் ஏனைய பகுதி மக்களையும் தத்தமது பிரச்சனைகளுக்காக தாமே போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளதுடன், உறுதியுடன் போராடுவதற்கான நம்பிக்கையையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் தொடங்கப்பட்ட காணாமல் ஆக்கச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறு மக்களையும் ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு முன்னுதாரணமாகவும் அமைந்திருந்தது.
இத்தகைய போராட்டங்களில் வழிநடத்த வேண்டிய அரசியல் கட்சிகள் அனைத்தும் சம்பிர்தாய பூர்வமாக வந்து செல்பவர்களாக இருந்தனரே தவிர, மக்களை வழிப்படுத்துவர்களாகவும், தலைமை தாங்குபவர்களாகவும் இருக்கவில்லை. மக்கள் தன்னெழுச்சியுடன் முன்னெடுத்துச் சென்ற இந்தப் போராட்டம் அவர்களிடத்தில் ஒரு சுயகட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் சிறிதளவும் கூட உணர்ச்சி வசப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இது கட்சித் தலைவர்களுக்கு பாடம் புகட்டியுள்ளது.
தமிழ் மக்கள் தங்களது தலைமையாக ஏற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தாங்கள் வழங்கிய ஆணையைப் பயன்படுத்தி வலுவான நிலையில் இருந்து அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான விடிவு குறித்து காத்திரமாக பேரம் பேசுவார் என நம்பியிருந்தனர். ஆனால் 29 நாட்களாக தொடர்ந்தும் மக்களது போராட்டம் நடைபெற்று வந்த நிலையில்தான் ஜனாதிபதியுடன் நேரில் சந்தித்து பேசியதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்தானது அரசாங்கம் சொல்வதை மக்களுக்கு சொல்வதாகவும், மக்கள் சொல்வதை அரசாங்கத்திற்கு சொல்வதாகவும் அமைந்திருந்தது. ஒரு தலைவர் தமது மக்களுக்கு சொல்லக் கூடிய கருத்தாகவோ அல்லது அரசாங்கத்திற்கு கருத்து சொல்வதாகவோ அவரிடம் இருந்து காத்திரமான செய்திகள் எவையும் வெளிவரவில்லை. இது அந்த மக்களை சீற்றமடையச் செய்திருந்ததுடன், தொடர்ந்தும் அம் மக்களை போராடச் செய்தது.
மக்களினுடைய இந்த வெற்றியை இன்று மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் தொடக்கம் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரும் தம்மால் தான் மக்களது இந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டதாக வெளிப்படுத்த முயல்கிறார்கள். மக்களுடைய காணிகள் விடுவிப்பது உட்பட ஏனைய விடயங்களிலும் உண்மையான ஈடுபாடும், பற்றுறுதியும் இருந்திருக்குமாக இருந்தால் இவர்கள் தாமே முன்னின்று இந்தப் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்கள் எழுந்தால் தெற்கில் பாரிய பிரச்சனைகள் உருவாகும் என்று கொக்கரித்தவர்கள் இன்று தன்னால் தான் முடிந்தது என்று சொல்வது வெட்கக்கேடானது. வடக்கு மக்களின் எழுச்சி தென்னிலங்கை சமூகத்தை தங்களது பிரச்சனைக்கு ஆதரவளிக்கத் தூண்டியதே தவிர அங்கு எத்தகைய கலவரத்தையும் ஏற்படுத்தவில்லை. இது கூட்டமைப்பு தலைவரின் கருதுகோளை பிழை என்பதை நிரூபித்துள்ளது. அதேபோன்று, சிங்கள கடும்போக்கு வாதிகளின் முகத்திரையையும் கிழித்திருக்கின்றது. உண்மையான ஜனநாயக சக்திகளையும், மனிவுரிமைச் செயற்பாட்டாளர்களையும், மனிதநேயமுள்ளவர்களையும் மதம், இனம், மொழி, சாதி கடந்து இணைத்துள்ளது.
ஒடுக்கப்பட்ட ஒரு தேசியம் தமது உரிமைகளுக்காக போராடுகையில் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே ஆயுதப்போராட்டத்தை கைக்கொண்டிருந்தது. இதனை உலகநாடுகள் பயங்கரவாதம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி மௌனிக்கச் செய்திருந்தன. உரிய தலைமையின்றி தன்னெழுச்சியாக மக்கள் வீதிகளில் இறங்கி தங்களது பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வும் தாங்கள் பாதுகாப்புடனும், எத்தகைய அச்சுறுத்தல் இன்றியும் சம பிரஜைகளாகவும் இலங்கையர்களாகவும் இந்த நாட்டில் வாழ்வதற்கு ஒரு நிலையான அரசியல் தீர்வு வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும் கூட இந்தப் போராட்டத்தில் தனது காத்திரமான பங்களிப்பையும், வழிகாட்டலையும் வழங்குவதில் இருந்து தவறியிருந்தது. மக்களின் இந்த வெற்றியே அவர்களையும், அடுத்த கட்டப் போராட்டங்களில் காத்திரமாக பங்கெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வைத்திருக்கின்றது.
ஐ.நாவின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 34 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஆட்சியில் கிடைத்திருக்கின்ற ஒரு ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் எனச் சிந்திக்க வைத்திருக்கின்றது. இதனால் இது ஐ.நாவின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இராஜதந்திர மட்டத்தில் இலங்கை அரசுடன் ஒரு நெகிழ்வுப் போக்கைக் கொண்டிருக்கின்ற பல்வேறு நாடுகளையும், மக்களின் இந்த எழுச்சியானது தடுமாறச் செய்திருக்கிறது. சர்வதேச வல்லரசுகள் முதல் உலக அமைதியை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா சபை வரை வேறு வேறு நிகழ்ச்சி நிரல்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்தால் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்குமோ என்றும் சிந்திக்க தூண்டியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இந்த எழுச்சியான போராட்டம் வெற்றியளித்திருக்கின்ற போதிலும் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்குதீர்வு காணவேண்டுமெனில், ஒரு வலுவான அரசியல் தலைமை மக்களின் ஆதரவுடன் உருவாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. ஒரு வலுவான கட்சி இல்லாமல் எந்தவொரு நாடும் விடுதலை அடைந்ததாக வரலாறு இல்லை. இதனைப் போன்றே எந்தவொரு தேசிய இனத்திற்கும் அந்த தேசிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வலுவான கட்சி இல்லாவிடில் போராட்டம் மழுங்கடிக்கப்படும். தனித்துவமான தலைவர்கள் யாரும் இல்லாத இந்த சூழலில் தற்காலிகமாகவேனும் மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக பல்வேறு முனைகளிலும் போராடிக் கொண்டிருக்கும் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்குமா எனபதே தற்போது எழும் கேள்வியாகவுள்ளது.
N5




