மக்களின் விருப்பத்துக்கு மாறாக எதனையும் நாம் ஏற்கமாட்டோம்: சம்பந்தன் மீண்டும் உறுதி
“புதிய அரசியலமைப்பின் மூலமாக இன நெருக்கடிக்குத தீர்வைக் காண்பதற்கு ஒரு தீர்மானம் எடுக்கின்ற போது நாம் மக்களின் முன்னிலையில் வருவோம் மக்களின் தீர்மானத்திற்கு மாறாக விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு விடயத்தையும் நாம் ஏற்கமாட்டோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
“தடம்மாறுகிறாதா தமிழ்த்தேசியம்?” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வு நிலை, கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
“நாங்கள் தற்போது இக்கட்டான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேம். எமது மக்களின் தேசிய பிரச்சினை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக தீர்க்கப்படவில்லை. இந்த நாட்டில் மூன்று அரசியல் சானசங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. முதலாவதாக 1947 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசியல் சாசனத்தை உருவாக்கியிருந்தது. அதற்கு பின்னர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க தலமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2 ஆவது யாப்பை உருவாக்கியது.
அச்சமயத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் தர்மலிங்கம் சமஸ்டியைனக்கோரினார். அதன்பின்னர் நாம் பிரந்திய ரீதியிலான அதிகாரப்பகிர்வைக் கோரினோம். அது நிராரிக்கப்பட்டபோது நாம் அரசியல் சாசன சபையிலிருந்து வெளியேறினோம். அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் தமிழ் மக்கள் பங்கேற்றிருக்கவில்லை. இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட 3 அரசியல் சாசனங்களிலும் தமிழ் மக்கள் பங்களித்திருக்கவில்லை. இது பாரிய குறையாகும். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் ஆட்சி புரிகின்றவர்கள் அந்த நாட்டு மக்களின் மக்களின் அங்கீகாரத்தை பெறுவதாக இருந்தால். அம்மக்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது புதியஅரசியல் சாசனத்தை உருவாக்குதவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இது தனியே தமிழ் மக்களுக்கு தேவையானதல்ல. பெரும்பான்மை மக்களுக்கும் அவசியமானது. ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு முன்னதாக இலங்கை சர்வதேசத்தின் சமூகத்தின் முற்றாக இழந்திருந்தது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம்,சட்டமீறல்கள், உள்ளிட்ட பல குறைகளைக் கொண்டிருக்கின்றது.
நாடு தற்போது பாரிய கடன் சுமையை கொண்டிருக்கின்றது. நாட்டின் வருமானம் கடன் சுமையை செலுத்துவதற்கு முடியாதிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து நாடு மீள வேண்டிய கட்டாய தேவை உள்ளது. அதற்று உரிய வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்குதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதற்காக வழிநடத்தும் குழு அமைக்கக்பட்டுள்ளது. உபகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு உபகுழுக்களில் பங்கேற்றுள்ளனர்.
இந்த உபகுழுக்கள் கிரமாக கூடுகின்றன. நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நாம் எதிர்பார்த்ததையும் விடவும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. பிரதமரின் கணிப்பின் பிரகாரம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக புதிய அரசியல் சாசனம் சபையில் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதன் பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தினைப் பெற்று சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறவேண்டியுள்ளது. அதற்கு ஒரு சில வாக்குகள் அவர்களுக்கு தேவையாகவுள்ளது. புதிய அரசியல் சாசனம் எமக்கு திருப்திகரமாக இருக்குமாயின் எமது 16வாக்குகளையும் நாம் அளிப்போம். இதற்கு முன்னதாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன மட்டுமே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தார். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 18ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதராவாக வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்காக மூன்றிரண்டு பெரும்பான்மையை ஏற்படுத்தியிருந்தார். அவ்விரு சந்தர்ப்பங்களையும் தவிர எந்தவொரு அரசாங்கத்திற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலைமையில் தான் அரசியல் சாசன விடயங்களை நாம் கையாள்கின்றோம். தற்போது முன்னெப்போதுமில்லாதளவு எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கக்பட்டுள்ளது. 2012, 2013, 2014 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2015ஆம் ஆண்டு புரட்டாதி மாத அமர்வில் தற்போது நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆடி மாத கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையை சமர்பித்த போது இலங்கை அரசாங்கத்தினால் அரசியல் சாசன செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை கூறியுள்ளார். பல்வேறு சர்வதேச நாடுகள் பேச்சுவார்தைகளை முன்னெடுக்கும் போதும் அரசியல் சாசன ஏற்படுகள் முன்னெடுக்கப்படுவதை குறிப்பிடுகின்றன. இந்த விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுகின்றன.
சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்று ஆசிய விவகாரங்களுக்கான. அமெரிக்க உதவி இராஜங்க பிரதிச் செயலாளர் நிஸா பிஸ்வால் மற்றும் உதவிச் மலி நெக்ஸ் கீ அரசியல் சாசன செயற்பாடுகளை வெற்றி கரமாக நிறைவேற்றவேண்டுமென கூறியிருக்கின்றார்கள். அதனை அரசாங்கம் நிறைவேற்ற வேண்யடிது பாரிய பொறுப்பாகும்.
1987ஆம் ஆண்டு ஆடி மாதம் 29ஆம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள இனத்தினர் உள்ளனர். அவர்களின் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தமையால் இணைந்திருக்கவேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தச்சட்டம் போதுமானதாக இல்லாது விட்டாலும் கூட மாவட்ட சபைகளை கூட பெறமுடியாத நிலைமையில் இருந்த எமக்கு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் வழங்க்கப்பட்டன. அதன் பின்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் 13 ஆவது திருத்தச்சட்டம் போதாது என்ற அடிப்படையில் அரசியல் சாசன திருத்திற்காக மங்கள முனசிங்க குழு நியமிக்கப்பட்டது.புதிய மானிலத்திற்கு எவ்வாறான அதிகாரங்க்ள இருக்கின்றதோ அவ்விதமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அக்குழுவால் சிபாரிசு செய்யப்பட்டது.
1995 ஆம் ஆண்டு நானும் நீலன் திருச்செல்வமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்க சென்ற போது தீர்வு குறித்த முதற் பிரதியை எம்மித்தில் தருவதாக கூறி கையளித்தார். துரதிஸ்டவசமாக அதனை நிறைவேற்ற முடியாமல் போனது. அதற்கு பின்னர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வை ஏற்படுத்த முயற்சியெடுத்தார். தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வரும் பகுதிகளுக்கு சமஷ்டி அடிப்படையில் அதியுட்சமான அதிகாரங்களை வழங்குவதற்கு ஒஸ்லோவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதேதீர்மானம் டோக்கியோவிலும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மகிந்த ரஜபக்ஷ ஆட்சி பொறுப்பை கையேற்றார். அவரும் 13ஆவது திருத்தச்சட்டம் போதுமானதல்ல என்பதை ஏற்றுக்கொண்டு 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சர்வகட்சி குழுவை ஸ்தாபித்தார். அதியுட்ச அதிகார பகிர்வை வழஙங்க தயாராக இருந்தார்.
அதன் பிரகாரம் அச்சர்வகட்சி உள்ளிட்ட விடயங்கள் அனைத்திலும் நாம் பங்குபற்றினோம். எமக்கு என்ன தேவை என்பதை கூறினோம். குழப்பங்கள் ஏற்பட்டது. ராஜபக்ஷ 2 ஆவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.அதன் பின்னர் நாம் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அழைக்கப்பட்டார். தேசிய பிரச்சினை தொடர்பாக பேசுமாறு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். நாங்களும் பேச்சுவார்ததை நடத்தினோம். 2011 ஆம் ஆண்டு தை மாதம் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. சித்திரை மாதம் வரையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. எமது தீர்வுக் கோரிக்கையை எழுத்துமூலமாக கையளிக்குமாறும் அதற்கு பதில் வழங்குவதாகவும் அரசாங்கம் கூறியது.
ஆவணி மாதம் வரையில் பதில் கிடைக்கவில்லை. ஆவணி மாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது பதில் வழங்குமாறு கூறனேன். அவர்கள் பதில் வழங்காததன் காரணமாக அடுத்த பேச்சுவார்ததைக்காக திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்காது நிறைவடடைந்தது. மறுதினம் என்னை தொலைபேசி மூலம் மகிந்த ராஜபக்ஷ அழைத்தார். நான் சென்றேன் நீங்கள் பிரபாகரனை விடவும் கடினமானவர் எனக் கூறினார். அப்போது நான் துப்பாக்கியை நான் ஒருபோதும் கையில் பிடித்தது கிடையாது.ஜனநாயக வாதி நான் என்றேன்.என்னையும் பிரபாகரனயையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது என்றேன்.
அதன் பின்னர் அம்மாதம் 16 ஆம் திகதி மீண்டும் பேசத் தீர்மானித்தோம். எனினும் அரச தரப்பினர் வருகை தரவில்லை. அதடினை தொடர்ந்து பராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதாகவும் அதில் பங்கேற்கவும் கூறினர். நாம் பாராளுமன்ற தெரிவு குழுவில் பங்கேற்கவில்லை.எனக்கும் உங்களுக்கும்(மஹிந்த ராஜபக்ஷ) பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாது விட்டால் பாராளுமன்ற தெரிவு குழுவில் எவ்வாறு இணக்கம் ஏற்படும் தெரிவு குழுவில் பல்வேறு கட்சிகளும் இருக்கின்றன. என்பதை சுட்டிக்காட்டி அக்குழுவில் பங்கேற்க மறுப்பு தெரிவித்தோம்.
எமது நிலைப்பாடு அரசாங்கத்திற்கு தெரியும். இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு மக்களும் நாமும் பாரிய பங்களிப்பைச்செய்துளோம். நாம் பக்குவமாக நிதானமாக செயற்பட்டதால் ஆட்சி மாற்ற கருமம் குழம்பவில்லை.ஆட்சி மாற்றத்தை நாம் எமக்காக கேக்கவில்லை. முழு நாட்டிற்குமாக கேட்டோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
சர்வதேச கண்காணிப்புடன் அரசியல் சாசன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன. இந்நிலையில் அதனை குழுப்புவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இம்மாதம் 28 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை செய்யப்போகின்றார். ஏன் அவ்வாறு பாதயாத்திரை செய்கின்றார். அரசியல் சாசன செயற்கபாடுகளை முன்னெடுக்காது தடுக்கவே அவ்வாறு செய்கின்றார்.அவரும் அவரோடு இணைந்தவர்களும் குழுப்புவதறகு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறான நிலைமையில் நாமும் அதற்கு துணைபோகும் வகையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.
நாங்கள் வடகிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்பதுடன், சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் எமது மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம். சர்வதேச நாடுகளில் கூட்டுறவு சமஷ்டி உட்பட் பல்வேறு சமஷ்டி முடைிறமைகள் காணப்படுகின்றன. தற்பொழுது புதிதாக ஒற்றையாட்சி – சமஷ்டி முன்வைக்கப்படுகின்றது. இறுதியில் ஒரு தீர்மானம் எடுக்கின்ற போது நாம் மக்களின் முன்னிலையில் வருவோம் மக்களின் தீர்மானத்திற்கு மாறாக விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு விடயத்தையும் நாம் ஏற்கமாட்டோம் என்ற வாக்குறுதியை வழங்குகின்றேன் என்றார்.




