மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி வடிவம் சிங்களவர்களின் விருப்பங்களை பூர்த்தியாக்குவதாகவுள்ளது : சுரேஷ்
புதிய அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இறுதி சிபார்சு வடிவமானது சிங்கள மக்களது விருப்பங்களை பூர்த்தி செய்யகூடியதாகவே அமைந்துள்ளதுடன் அது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
குறித்த விடயத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையானது எவ்வாறு கையாளப்போகின்றது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன் தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
வடக்கு மாகாணசபையும் தமிழ் மக்கள் பேரவையும் தயாரித்த அரசியல் திட்ட முன்மொழிவுகள் மக்கள் கருத்தறியும் குழுவிடம் வழங்கப்பட்டிருந்தன. அதில் மிக முக்கியமாக தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, இறையாண்மை இருக்கின்றது, அவர்களுக்கான சுயாட்சி, அதிகாரமானது பகிரப்பட வேண்டும் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும் மக்கள் கருத்தறியும் குழுவினால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைபில் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனம் என்ற சொற் பிரயோகம் பாவிக்கப்படாது சிறுபான்மை இனம் என்ற சொற்பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றினூடாக தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையின் வெளிப்பாடாகவே மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி சிபாரிசு வரைபு காணப்படுகின்றது. அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக தற்போது எதுவும் குறிப்பிடப்படாததுடன் முன்னர் இருக்கின்ற சட்ட ஏற்பாடும் நீக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் கருத்தறியும் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டவர்கள் முழுமையான அதிகாரப் பகிர்வு, சமஷ்டி போன்ற விடயங்களில் உறுப்புரிமை வாய்ந்தவர்களாக இருந்தார்களா என்ற கேள்வியும் இவர்கள் தமது கருத்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்றவாறே முன்வைத்தார்களா என்ற கேள்வியும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் இறுதி வரைபு சிபாரிசானது சிங்கள மக்களது விருப்பங்களை பூர்த்தி செய்யக்கூடியாதகவே அமைந்துள்ளதுடன் அது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையவில்லை. எனவே இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையானது அல்லது எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன் றோர் எவ்வாறு இதனை கையாளப் போகின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது என்றார்.
R-06




