செய்திகள்

மக்கள் தலைவராக உருவெடுத்திக்கும் சி.வி

நரேன்-

சூடுபிடித்திருக்கும் வடமாகாண சபை விவகாரம் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியினுடைய கௌரவத்திற்கும் அதன் தலைமையின் ஆளுமைக்கும் விடப்பட்ட சவாலாக கருதி அந்தக் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. அரசியல் களநிலை, உள்நாட்டு அரசியல் சூழல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்மந்தமாக காத்திரமான முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆகியவற்றை கணக்கில் எடுக்காமல் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர்களின் மீது தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சர் நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு குறுகிய சிந்தனையில் கட்சி எப்படி போனாலும் பரவாயில்லை. கட்சியின் மானம், மரியாதை காற்றில் பறந்தாலும் பரவாயில்லை. அமைச்சரை காப்பாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. சுருங்கச் சொன்னால் அமைச்சரை காப்பாற்றுவதிலேயே கட்சியின் கௌரவம் தங்கியிருப்பதாக கட்சித் தலைவர் தப்புக் கணக்குப் போட்டுள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட அணுகுமுறை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொண்டாவது முதலமைச்சரை பதவி நீக்கம் செய்தே தீருவேன் என்று திடசங்கற்பம் பூண்டு அவர் செயற்படுகின்றதை பார்க்கின்ற போது செல்வாவின் தமிழரசுக் கட்சிக்கும், மாவையின் தமிழரசுக் கட்சிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்பது புலனாகிறது. ஐக்கியத்திற்காக தனது கட்சியை முடக்கி வைத்த தந்தை செல்வாவிற்கும் ஐக்கியத்தின் பேரால் தனது கட்சியை மட்டும் வளர்த்த மாவைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் பங்காளிக் கட்சிகள் வயதில் மூத்தவர் என்ற அடிப்படையிலும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர், தமிழ் மக்களின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர், நேர்மையாக செயற்படுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் திரு.இரா.சம்மந்தன் அவர்களை கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும், பின்னர் கூட்டமைப்பின் தலைவராகவும் பங்காளிக் கட்சிகள் ஏற்றுக் கொண்டனர். இன்று வரை அவர் கட்சித் தலைவராக இருக்கிறாரேயன்றி மக்கள் தலைவராக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. அதன் விளைவு முள்ளியவாய்கால் நினைவேந்தலில் வெளிப்பட்டது.

தங்களுடைய குரலை பிரதிபலிக்கக் கூடிய ஒரு தலைவர் தமிழ் மக்களுக்கு தேவைப்பட்டார். அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கையில் எடுத்துக் கொண்டார். இதன் விளைவாக தமிழ் தேசிய இனப் பிரச்சனையின் அடி ஆழத்தையும், அது கடந்து வந்த பாதையையும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் குரலை நசுக்குவதற்காக சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் செயல்களையும் அவர் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் துணிச்சலுடனும், இராஜதந்திர ரீதியிலும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறார். அத்துடன் வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களது கருத்துக்களை செவிமடுத்து அவர்களுக்காக குரல் கொடுத்தும் வருகின்றார். இதன்காரணமாக அவர் இன்று எந்த அரசியல் கட்சிகளின் பின்புலமும் இன்றி ஒரு மக்கள் தலைவராக தலைநிமிர்ந்து நிற்கிறார்.

வடக்கு முதலமைச்சரின் இத்தகைய வளர்ச்சியைக் கண்டு சகிக்க முடியாத தமிழரசுக் கட்சி அவருடைய வளர்ச்சியை எவ்வாறு தமிழ் தேசிய இனத்தின் தீர்வுக்கு பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பற்றி சிந்திக்காமல் அவர் வளர்ந்தால் எங்கள் கட்சி காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவருடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதாக எண்ணிக் கொண்டு ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தமது கட்சிக்காரர்களை காப்பாற்ற களம் இறங்கியுள்ளது. இரண்டு நடவடிக்கைகளுமே சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவே.

அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் யாப்பு தொடர்பாக வழிநடத்தல் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு விடயங்களும் ஒரே நேரத்தில் வருகின்றதைப் பார்க்கின்ற பொழுதும் அதனையொட்டி நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் களநிலைகளும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தென்னிலங்கையில் ஞானதேரரை கைது செய்வதற்கான பிடியாணையும் வழங்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையானது பௌத்த, இஸ்லாமிய மதங்களுக்கிடையிலான ஒரு மோதல் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் வடமாகாணத்தில் ஒரு நீதியரசராக இருந்து ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்தி தனது அமைச்சரவை சகாக்களின் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்த தருணத்தில் தமிழரசுக்கட்சி ஒட்டுமொத்த மாகாண சபையின் நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆக மூவின மக்களும் தத்தமது பிரச்சனைகளுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் முக்கியத்துவம் வாய்ந்த இரு பிரச்சனைகளையும், பாராளுமன்றத்தில் பெரியளவிலான விவாதங்கள் இன்றி முடிப்பதற்கு அரசாங்கம் முயல்வதாக தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைக்கு துணைபோவதாகவே தமிழரசுக் கட்சியின் செயற்பாடும் அமைந்திருக்கிறது. முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக் கட்சி அரச கட்சி உறுப்பினர்களுடன் கைகோர்த்துள்ளமை இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழரசுக் கட்சி வீழ்ந்துள்ளதையே இது காட்டுகிறது.

தமிழரசுக் கட்சியின் இத்தகைய அரசியல் செயற்பாட்டை தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் புரியத் தொடங்கிவிட்டனர். இதன்விளைவாகவே வடக்கில் முதலமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழரசுக் கட்சிக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றது. மாகாணசபை முன்றலில் வியாழக்கிழமை குவிந்த இளைஞர்கள் முதலமைச்சரின் இல்லத்தை நோக்கிச் சென்றும், யாழ் நல்லூர் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை குவிந்த மக்களும், வவுனியா பேரூந்து நிலையத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுஅமைப்புக்களும், கிளிநொச்சியில் முதலமைச்சருக்கு சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுஅமைப்புக்களும், ‘தமது தலைவர் விக்கினேஸ்வரன் ஐயா என்றும் தமிழர்களுக்காக நீங்கள் தலைமைத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் எங்கள் தலைவர் விக்கினேஸ்வரன் ஐயாவே என்றும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தமக்கான தலைமையைத் தேடிக் கொண்டிருந்த நிலையில் தமக்கு கிடைத்த ஒரு ஜனநாயகத் தலைவனே விக்கினேஸ்வரன் ஐயா’ என்றும் கோசம் எழுப்பி அவருக்காக குரல் கொடுத்து வருகின்றனர். வ்டக்கில் ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டு முதலமைச்சருக்கு ஆதரவாக மக்கள் தமது எண்ணக் கிடக்கைகளை ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தமிழரசுக் கட்சிக்குள் உண்மையாகவே தேசிய இன விடுதலைக்காக இணைந்திருப்பவர்கள் அந்தக் கட்சியின் தலைமை எடுத்துள்ள தவறான முடிவைப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியேறுவதே அவர்களது விசுவாசத்தை நிரூபிக்கும் செயலாக அமையும். மேற்சொன்ன உண்மைகளை புரிந்து கொண்ட பின்னரும் தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவார்களேயானால் அவர்கள் அனைவரும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலையில் விசுவாசமற்றவர்களாகவே கருதப்படுவார்கள். இன்று வடக்கில் எழுந்திருக்கும் போராட்டமானது மேல் இருந்து திணிக்கப்பட்ட தலைவருக்கும், கீழ் இருந்து ஒருவரான தலைவருக்கும் இடையிலான ஒரு பனிப்போராகவும் பார்க்க முடியும். எவ்வாறாயினும் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலையை கருத்தில் கொண்டு பதவிகளுக்காகவும், கட்சி நலனுக்காகவும் சோரம் போகாமல் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கு தங்களை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரவேண்டும்.

மறுபுறம், மக்கள் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் நம்பிக்கை வீண் போகாத வகையில் தலைமை கொடுப்பதற்கு எவ்வித தயக்கமும் இன்றி முன்வரவேண்டும்.

N5