மக்கள் பிரச்சினைகள் இனவாதத்தால் மூடி மறைக்கப்படுகின்றது : ஜே.வி.பி
இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் அரசியல்வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டி மீண்டும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் வடக்கிலுள்ள விக்கினேஸ்வரன் போன்ற இனவாதிகளால் தெற்கிலுள்ள இனவாதிகளும் , தெற்கிலுள்ள ராஜபக்ஷ போன்ற இனவாதிகளால் வடக்கிலுள்ள இனவாதிகளும் போசனையடைவதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
நேற்று கொழும்பில் ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் பங்குரோத்து அரசியல்வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டி லாபமடைய முயற்சிக்கின்றனர். வடக்கிலுள்ள விக்கினேஸ்வரன் போன்ற இனவாதிகளால் தெற்கிலுள்ள இனவாதிகளும் , தெற்கிலுள்ள ராஜபக்ஷ போன்ற இனவாதிகளால் வடக்கிலுள்ள இனவாதிகளும் போசனையடைகின்றனர்.
இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது. இதனை நிறுத்த வேண்டுமென்றால் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும். ஆனால் கடந்த அரசாங்கத்தை போன்றே இந்த அரசாங்கமும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கையெடுப்பதில்லை. அவர்களின் காணி பிரச்சினை , வீட்டுப் பிரச்சினை மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்ற நோக்கம் இந்த அரசாங்கதிற்கு கிடையாது.
எவ்வாறாயினும் இனவாதம் இன்றி இந்த அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்றாகிவிட்டது. இதனால் இனவாதத்தை தூண்டி மக்களின் உண்மைப் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு அரசாங்கத்திற்கு விருப்பம். அதேபோன்று விக்கினேஸ்வரனும் அப்படித்தான் தன் வடக்கு மக்களினால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்காக இனவாதத்தை பயன்படுத்துகின்றார். என அவர் தெரிவித்துள்ளார்.




