மடு திருப்பதி பெருவிழாவில் என்றும் இல்லாதவாறு பல லட்சம் பக்தர்கள் பங்கெடுப்பு
மன்னார் யாத்திரிகர் ஸ்தலமான மடு திருப்பதி விழா நேற்று திங்கள் கிழமை நடைபெற்றபோது எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கடந்த 6ந் திகதி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை பாப்பரசர் கொடியையும் மடு பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளார் மடுத்திருப்பதி கொடியையும் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா நவநாட்கள் நடைபெற்று வந்தன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இவ்விழாவை முன்னிட்டு நற்கருணை விழா கொண்டாப்பட்டு அன்று பிற்பகல் நற்கருணை திருப்பவனியும் இடம்பெற்றது.
இதைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற பெருவிழாவின் தினமாகிய நேற்றையதினம் காலை 6.15 மணிக்கு நடைபெற்ற திருப்பலியானது கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் அதிமேதகு மல்கம் றஞ்சித் தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணான்டோ ஆண்டகை, அனுராதபுரம் ஆயர் நோபேட் அன்றாடி ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகைகளுடன் இணைந்து நூற்றுக்கு மேற்பட்ட அருட்பணியாளர்களும் திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.
.
இவ் பெருவிழாவுக்கு இம்முறை சுமார் ஐந்து இலட்சம் பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தருவார்கள் என எதிர்பார்த்திருந்தபோதும் எதிர்பார்த்ததுக்கு மேற்பட்ட பக்தர்கள் நாட்டின் எல்லா இடங்களிலும் இருந்து வருகை தந்திருந்தனர். இதனால் ஆலய வளாகத்துக்குள் கூடாரம் அமைத்து இருப்பதற்கு சிரம்மப் பட்ட பக்தர்கள் கூட்டம் ஏ14 வீதிகளிலும் கூடாரம் அமைத்து தங்கியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
மடு அன்னையின் திருச்சுரூப பவனி பக்தர்களின் மத்தியில் இடம்பெற்றதுடன் திருச்சுரூப ஆசீரை கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதிமேதகு கருதினால் றஞ்சித் மல்கம் ஆண்டகை வழங்கினார். இந்த திருச்சுரூப ஆசீர் வழங்கல் நிகழ்வுக்குப்பின் ஆயர்களின் முன்னிலையில் கிறிஸ்தவ கலாச்சார மற்றும் காணி அமைச்சருமான ஜோன் அமரதுங்க மன்னார் மாந்தை மாதா பூர்வீகமாக எழுந்தருளியிருக்கும் பூமியிக்கான காணிக்கான உறுதி பத்திரத்தை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் கையளித்தார்.
இவ் நிகழ்வின்போது நிதி அமைச்சர் ரவி கருணாயக்க, இராஐங்க அமைச்சர் றஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த nஐயவர்த்தன, அமைச்சர் அருந்திரக பெர்ணான்டோ, பாராளுமன்ற பிரதித் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை அமைச்சர் பா.டெனிஸ்வரன், மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிய தலைவரும் சிரேஸஷ;ட சட்டத்தரனியுமான புனிதநாயகம் ஆகியோரும் இவ் நிகழ்வின்போது கலந்து கொண்டனர். படங்கள், செய்தி: Gonsal Vas Coonghe












