மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸ் பதிவு: மக்கள் குழப்பத்தில்
மட்டக்களப்பு நகர பிரதேசத்திலுள்ள வீடுகளில் தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் கட்டளைச் சட்டம் 76ம் பிரிவின் கீழ் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விபரங்கள் தகவல்களுக்காக திரட்டப்படுவதாக பொலிஸ் கூறுகின்றது.வீடுகளில் நிரந்தரமாக தங்கியிருப்பவர்களின் விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருக்கும் ஏனையோர் பற்றிய விபரங்களும் சம்ர்பிக்குமாறு பிரதான குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிரந்தர வதிவிடம் , உறவு முறை தங்குவதற்கான காரணம் மற்றும் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால எல்லை போன்ற விபரங்கள் அதில் அவர்கள் தொடர்பாக கேட்கப்பட்டுள்ளன.
இந்த விபரங்களை விரைவாக கிராம சேவை அலுவலகர் ஊடாக கையிக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமூகமான சூழ்நிலையில் பொலிஸாரின் இந் நடவடிக்கை காரணமாக நகர பிரதேச மக்கள் ஒரு வித அச்சத்திற்குள்ளாகியிருப்பதாக நகரத்தை வதிவிடமாக கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையின் துனை அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் கூறுகின்றார்.
போர் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் பொலிஸார் குடியிருப்பாளர்களின் விபரங்களை திரட்டுவதற்கான காரணங்கள் பற்றி தெரியாமல் மக்கள் குழப்பமடைந்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.




