செய்திகள்

மட்டக்குளி சூட்டு சம்பவத்திற்கான காரணம் இதுதான்

கொழும்பு மட்டக்குளி சமித்புர பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது பாதாள குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமே என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரில் நுவன் சஞ்சீவ என்ற பெயருடைய ”சூட்டி உக்குங்” என்றழைக்கப்படும் பாதாள குழுவை சேர்ந்த 29 வயதுடையவரும் உயிரிழந்துள்ளதாகவும் இவர் ஆமி சம்பத் என்றழைக்கப்படும் பாதாள குழு தலைவரின் நெருங்கிய நண்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 24 ,26 மற்றும் 29 வயதுடைய மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவமொன்று தொடர்பான முறுகல் நிலையே இந்த சம்பவத்திற்கு காரணமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூட்டி உக்குங் என்பவர் குற்றச் செயலொன்றுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.-(3)