மண்டைதீவில் மூடப்பட்டுள்ள 3 கிணறுகளையும் தோண்டினால் பல எலும்புக்கூடுகளை மீட்கலாம்: ஆணைக்குழு முன் சாட்சி
மண்டைதீவில் மூடப்பட்டுள்ள மூன்று கிணறுகளை தோண்டினால் தீவகத்தில் காணாமல் போன பலரின் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை வெளிவரும் எனவே மூடப்பட்டு உள்ள கிணறுகளை மீள தோண்ட நடவடிக்கை எடுக்குமாறு கணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மண்டைதீவை சேர்ந்த ஒருவர் கோரியுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அல்லைப்பிட்டியை 90ம் ஆண்டு இராணுவத்தினர் சுற்றி வளைத்ததன் பின்னர் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து மண்கும்பான் சின்ன பள்ளிவாசலில் தங்கி இருந்தோம். அக் கால பகுதியில் மண்டைதீவு பாடசாலையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்தனர். அந்த பாடசாலையை சித்திரவதை கூடமாக வைத்து இருந்தனர். தீவகத்தில் கைது செய்யப்பட்டவர்களை அந்த பாடசாலைக்குள் கொண்டு சென்றே விசாரனைகளை முன்னேடுக்கின்றவர்கள். அதன் போது பலர் சித்திரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டு இருக்கலாம்.
அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் மண்டைதீவு முதலாம் வட்டாரத்தில் உள்ள இரண்டு தோட்டகிணறுகளினுள் போடப்பட்டு அக்கிணறுகள் மூடப்பட்டு உள்ளன. 2000ம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதியில் விவசாயம் செய்ய மூட்டப்பட்ட கிணறுகளை தோண்ட தொடங்கிய போது ஒரு கிணற்றுக்குள் இருந்து 80 க்கும் அதிகமானவர்களின் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் வெளி வந்தன. அதனை அடுத்து கிணறு தோண்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் தோண்டப்பட்ட கிணறும் மூடபப்ட்டதுடன் அருகில் இருந்த கிணறும் தோண்ட அனுமதிக்க வில்லை. அந்த இரு கிணறுகளும் இன்னமும் மூடப்பட்ட நிலையிலையே உள்ளன. அக் கிணறுகளை தோண்டினால் பல மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் வெளிவரலாம் அதனால் அவற்றை தோண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அதேபோன்று கடற்படை முகாம் அமைந்து இருந்த தேவாலய காணிக்கு அருகில் முகாமுக்குள் இருந்த கிணறு ஒன்று மூடபட்ட நிலையில் காணப்படுகின்றன. தற்போது அந்த முகாமை விட்டு கடற்படையினர் வெளியேறி விட்டனர். அந்த கிணற்றுக்குள்ளும் கொல்லப்பட்டவர்களை போட்டு மூடி இருக்கலாம் எனவே மண்டை தீவில் உள்ள இந்த மூன்று கிணற்றையும் தோண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.
R-06




