செய்திகள்

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அநுரவிடம் சுமந்திரன் கோரிக்கை!

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிலிடம் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னதான அரசியல் சூழ்நிலைகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது சுமந்திரன் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னரான, புதிய அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாகவும், அவர்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி 2015 – 2019 இற்கு இடைப்பட்ட காலத்தில் முன்னடுக்கப்பட்ட தேர்தல் வரைபினை அமுல்படுத்துதல் தொடர்பாகவும், இச் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு பிரதிநிதித்துவம் அவசியம் என்பதனையும் சுமந்திரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஊழல் ஒழிப்பு விவகாரங்கள் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் சம்பந்தமாக ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பினை வழங்க தயார் என்றும் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் முறை கேடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சிபாரிசின் பேரில் கொடுத்த மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் தொடர்பான பெயர் பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்படுவது மக்கள் மத்தியில் புதிய ஆட்சியாளர்களை குறித்ததான சந்தேகத்தினை ஏற்படுத்துவதனை அவர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதோடு, உடனடியாக அவ் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலினை வெளியிடுமாறும் கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறியுள்ளார்.

-(3)