மனிதனின் விழிநிலை உரு
மருத்துவர் சி. யமுனாநந்தா
மனிதனின் விழிநிலை மூளையில் உணர்வுகளுக்கு பொறுப்பான பகுதியின் நரம்புக்கல இணைப்புக்களின் கணத்தாக்கப் பாதைகளினால் செயற்படுத்தப்படுகின்றது.
விழிநிலை கணத்தாக்கப் பாதைகளை ஐந்து வகையாக தொழிற்பாட்டு ரீதியில் ஆராயலாம். அவையாவன :
(1) புத்திக்கூர்மை வீச்சுக்குரிய கணத்தாக்கப் பாதைகள்
(2) உளநோய் வீச்சுக்குரிய கணத்தாக்கப் பாதைகள்
(3) உணர்வுகளின் வீச்சுக்குரிய கணத்தாக்கப் பாதைகள்
(4) ஆன்மீக உணர்வு வீச்சுக்குரிய கணத்தாக்கப் பாதைகள்
(5) மாய உண்மை வீச்சுக்குரிய கணத்தாக்கப் பாதைகள்
இவை ஒன்றுடன் ஓன்று இணைந்தவைகளாக அமையும்.
நரம்புக் கணத்தாக்கம் கடத்தப்படுவதற்கான தூண்டல்கள், புலன் உணர்வுகள் மூலம் ஏற்படும். இவை பார்வைப்புலன், செவிப்புலன், தொடுகைப்புலன், சுவைப் புலன், மோப்பப் புலன் என்பனவாகும். இவை இயற்கையான தூண்டல்களாக அமையும். இயல்பான விழிநிலையினை ஏற்படுத்தப்படும். அசாதாரண விழிநிலை ஏற்படுதல் தூண்டல்கள் குறையும் சந்தர்ப்பங்களிலும் அதாவது புலன்கள் குறைந்த நிலையில் ஏற்படும். இவை விரதம், தவம், தியானம், யோகம் போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும். மேலும் காடுகள், குகைகள், மலைகள், ஆறுகள், கடற்கரைகள் சார்ந்த இடங்களிலும் ஏற்படும். உள மருத்துவ மாத்திரைகள், போதைப் பொருட்கள், மதுபானம் என்பனவும் விழிநிலையில் புரள்நிலையினை ஏற்படுத்தும். மிகையான தூண்டல்கள், வெகுதூட்டப்பட்ட தூண்டல்கள் என்பனவும் அசாதாரண விழிநிலையினை ஏற்படுத்தும்.
மாயத்தூண்டல்களாக கணனிக்காண்மியங்கள், மின்னணுமனிதம் என்பன அமையும். இவை நவீன மின்னணுத் தொழில்நுட்ப விழிநிலையினை ஏற்படுத்தும். தற்போது பாவனையில் உள்ள சமூக வலைத்தளங்களும் மாயத்தூண்டல் விழிநிலையினை ஏற்படுத்துகின்றன.
விழிநிலையினை நாம் பல்பரிமாணத்தில் ஆராய்ந்தாலும் எளிதில் விளங்குவதற்காக ஒரு தளத்தில் ஓர் ஐங்கோணியின் பக்கங்களிற்குள் அடக்கி விடலாம். அதன் ஒவ்வொரு பக்கத்தின் அளவும் முறையே புத்திக்கூர்மையின் வீச்சு, உளநோய்களுக்கு உரிய வீச்சு, உணர்வுகளுக்கு உரிய வீச்சு, ஆன்மீக உணர்வுகளுக்கு உரிய வீச்சு, மாய உண்மை உணர்வுகளுக்கு உரிய வீச்சு என்பனவற்றால் வரையறை செய்யப்படும். இவ் வீச்சுக்கள் 0 – 100 இடையிலான அலகுகளாக வகுக்கப்படும். 0 – 5 மிகவும் தாழ்நிலையாகவும், 95 – 100 வரை மீநிலையாகவும் அமையும். எந்தவொரு மனிதரும் மேற்கூறிய ஐந்துவகை விழிநிலை வீச்சுக்களில் யாதாயினும் ஒவ்வோர் கணியத்தைப் பெறலாம்.
ஒரு தள ஐங்கோண விழிநிலை உரு.

இவ்வாறு எல்லா மனிதர்களது விழிநிலைகளையும் புள்ளியிடலாம்.
உலகில் அறிவாளிகள் தவறு செய்வதற்கும், ஆன்மீக வாதிகள் தவறு செய்வதற்கும் காரணம் அவர்களின் விழிநிலைக்குக் காரணமான ஐந்து பக்கங்களில் ஏனைய பக்கங்களில் உள்ள குறைபாடே ஆகும். நல்லவர்கள் என்பது ஓர் சார்பு மதிப்பீடு. கெட்டவர்கள் என்பதும் ஓர் சார்பு மதிப்பீடு. இது அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும். மனிதனின் விழிநிலையினை ஐந்து பரிமாணங்களில் ஆராய்ந்து ஒவ்வொரு மனிதனையும் நெறிப்படுத்த வேண்டியது மனித நாகரிகத்தின் இன்றைய சவால் ஆகும்.
தனிமனித நடத்தை பாதிக்கப்படல், குடும்பக் கட்டமைப்பு குலைவு ஏற்படுதல், சமூகப் பிறழ்வுகள் அதிகரித்தல், சமூக வன்முறைகள் அதிகரித்தல், இனரீதியான மோதல்கள் உருவாதல், மதரீதியான பிரிவினை அதிகரித்தல், நாடுகளுக்கு இடையே யுத்தங்கள் உருவாதல் என்பன தனிமனித விழிநிலையினை சரியாகக் கையாளாதமையால் ஏற்படுபவையே. இவை தொடர்பான விழிப்புணர்வு மருத்துவத்தால் ஏற்படுவது கடினம். ஆனால் சமூகவியல், மானிடவியல், மேன்மைத்துவத்தில் ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும்.
உலகில் இன்று உண்மையான சாந்தி, சமாதானம் என்பவற்றை வெறுமனே ஆன்மீகத் தலைவர்களோ, அரசியல் தலைவர்களோ, சட்டத்தினாலோ அன்றேல் சமூக விழுமியங்களாலோ ஏற்படுத்த முடியாமைக்கு விழிநிலையின் ஐந்து பரிமாணங்களினதும் விலகல் வீச்சுக்களே காரணம். ஆனால் அவற்றைப் பன்முக அணுகுமுறையில் பாதகம் ஏற்படாது மனிதகுல நன்னிலைக்கு மாற்றுவது நமது கடமையாகும்.
உலகளாவியரீதியில் விழிநிலை பிரள்வுகளின் தாக்கமே உக்கிரெயின் – ரஸ்சியா போர், சீனா – தாய்வான் முரண்நிலை என்பனவாகும். இலங்கையில் தேசியரீதியில் விழிநிலையில் உள்ள பிரள்வுகளே இனரீதியான வேறுபாடுகள், மதரீதியான வேறுபாடுகள், பிரதேசரீதியான வேறுபாடுகள் என்பனவாகும்.
அண்மைக்காலத்தில் பல்கலைக்கழங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை, சிறு குழாம்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள விழிநிலைப் பிறழ்வுகளேயாகும். இவ்வாறே குடும்ப, தனிமனித விழிநிலைப் பிறழ்வுகளும் அதிகரித்த தன்மை காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் இத்தகைய விழிநிலைப் பிரழ்வுகளைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவினை கணனிகளின் உதவியுடன் பிரயோகிக்க வேண்டிய தேவை எழலாம்.


