மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவோம்! ஜனாதிபதி
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நல்லிணக்க அடிப்படையிலான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் மேற்கண்ட அழைப்பை விடுத்துள்ளார்.
தனது செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள அவர்,
நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதாயின் வறுமை, நோய்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவது மாத்திரமன்றி, இன, மத, மொழிகள் போன்ற பேதங்களுக்கு அப்பால் நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட, மனித உரிமைகளை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.
மனித வரலாற்றின் நெடுகிலும் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் போற்றத்தக்க வகையில் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இலங்கையர் என்ற வகையில் நாமும் பெருமை கொள்ளத்தக்க சுதந்திரப் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளோம்.
அரசாட்சி தொடக்கம் மக்களாட்சி வரையான நீண்ட சுதந்திரப் போராட்ட வரலாற்றில் போற்றத்தக்க விடயங்கள் போன்றே மறக்கப்பட வேண்டிய இருண்ட பக்கங்களும் உண்டு.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அர்ப்பணிப்புகள் குறித்து நாம் எமது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் உறவினர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அண்மையில் நாம் வென்றெடுத்த அரசியல் ரீதியான சுதந்திரத்தைப் பலப்படுத்தி, ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொண்டு, தேசிய சிந்தனையிலான அரசியல் பாதையொன்றைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய கட்டமொன்றை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம்.
அதன் ஊடாக அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தனது சுதந்திர தினச்செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
N5




