செய்திகள்
மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி
கடந்த ஆண்டு தனது பரிந்துரைகளில் சுமார் முப்பது சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தனது அறிவுறுத்தல்களை எதிர்த்து மேன்முறையீடு செய்ய முடியாது என்றும், இதன் காரணமாக, குறித்த பரிந்துரைகளை அரச நிறுவனங்கள், செயற்படுத்தக் கடமைப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நடைமுறை என்ற போர்வையில் தமது பரிந்துரைகளைச் செயல்படுத்தாமல் இருப்பது நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை மையப்படுத்தி, தமது பரிந்துரைகளைச் செயற்படுத்தாத, அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள இரணைதீவை அணுகுவதற்குத் தடை விதிக்கப்பட்ட ஒரு குடிமகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பின்னர், 2023 டிசம்பர் 8 ஆம் திகதியன்று, குறித்த தீவுக்குள் பொதுமக்கள் நுழைவதற்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஆணைக்குழு அறிவுறுத்தியது.
இது தொடர்பில், அந்தப்பகுதியில் பணிகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினருக்கு எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது.
இருப்பினும், ‘தேசியப் பாதுகாப்பு’ என்று கூறி, கடற்படை அந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தத் தவறிவிட்டது.
இந்தநிலையில் குறித்த செயற்பாடு, திருப்திகரமாக இல்லை என்று உணர்ந்த பின்னர், ஆணைக்குழு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கெஹான் குணதிலக்க தெரிவித்துள்ளார்




