செய்திகள்

மலையக மக்கள் தொடர்பாகவும் புலம்பெயர் தமிழர்கள் கவனம் செலுத்த வேண்டும் : விக்கினேஸ்வரன் லண்டனில் கோரிக்கை

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் சொறஸ்ரிறியன் மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் மலையக மக்கள் தொடர்பாக ஆற்றிய உரை வருமாறு,

”வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளிலும் புலம்பெயர் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். மலையக தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளும் புறக்கணிப்புக்கள் காரணமாக தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. அவர்களுக்கான உட்கட்டுமான வசதிகள் முறையாக இன்னமும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. உரிய பாடசாலை வசதிகள் கூட பல பகுதிகளில் இல்லாமல் இருக்கின்றன.

தொடர்ந்தும் அம் மக்களின் வாழ்க்கை தரம் அடி மட்டத்திலேயே காணப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் மண் சரிவு இடம்பெற்ற பகுதிகளுக்கு விஜயம் செய்தபோது இந்த விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஆகவே மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உயர்த்தும் தார்மீக கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இருக்கிறது. பல்வேறு தொழில் துறைகளில் முதலீடுகளை செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். அதற்கான பல வாய்ப்புக்கள் அங்கு இருக்கின்றன.” என அவர் தெரிவித்துள்ளார். -(3)