மாகாணசபைக்கு அதிகாரங்களை தரவில்லை என வெறும்பேச்சுக்களை பேசுவதில் அர்த்தமில்லை: தட்டிப்பறிக்க வேண்டும்!
நாங்கள் எல்லோரும் எங்களுடைய அரசாங்கம் வருகின்றது என்று தான் மாகாணசபைக்கு வாக்கு போட்டோம். சிறிலங்கா அரசை கேள்வி கேட்கிறோம். சிறிலங்கா அரசில் நம்பிக்கையில்லை. அதை விடுங்கள். மாகாணசபை என்பது எங்களுடையது. அதிகாரம் என்பது நாங்கள் பெற வேண்டும். தட்டிப்பறிக்க வேண்டும். அதிகாரம் தரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். வெறும் பேச்சுக்களைப் பேசுவதில் அர்த்தமில்லை என பாராளுமன்ற குழுக்களின் தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கவிஞர் எம். பரஞ்சோதி எழுதிய நாங்கள் விட்டில்கள் அல்ல என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்தாவது,
கேப்பாபுலவு மக்கள் போராடுகிறார்கள் அவர்களது நிலத்திற்கு என்று இருந்து விட முடியாது. நாளைக்கு எங்களது வீட்டிற்கு பக்கத்தில் வந்து ஒருவர் இருக்கின்ற போது நாங்கள் போராடுவோம். அப்பொழுது எங்களுக்கு ஆதரவாக அவர்கள் போராடுவார்கள். நாங்கள் நெருப்பைக் கண்டால், வெளிச்சத்தைக் கண்டால் சாவதற்கு விட்டில்கள் அல்ல. நாங்கள் வெடித்தவர்கள். நெருப்பை உருவாக்குவதற்கு வெடித்த இனம். இந்த கவிதையும் எமக்கு உணர்வுகளைத் தூண்டுகிறது. பல கலைஞர்கள் தமது உணர்வுகளை எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதுகின்ற போது பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். பொது சிந்தனையார்களை விட்டுவிடுங்கள். ஒரு விடுதலைப் போராளியாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்ற ஒரு கவிஞன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் எப்படி எங்களை தயார் படுத்துகின்றோம் என்பது தான் கேள்வி.
தமிழ் நாட்டிலே இளைஞர்கள் தங்களது பாராம்பரியம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள். இங்கேயும் எங்களுடைய இளைஞர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். கேப்பாபுலவுக்கு அந்தப் போராட்டங்கள் எங்கே போனது…? காணாமல் போனவர்களின் உறவுகள், தாய்மார்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கும் போது அந்த இளைஞர்களின் போராட்டம் எங்கே போனது. மழை பெய்கிறது. நாங்கள் பார்வையாளராக திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு போறோம். அதில் ஒருவர் வந்து இருந்திட்டாலே பெரிய எழுச்சியாக இருக்கிறது. நிச்சயமாக கேப்பாபுலவு வெல்லப்பட வேண்டும். எல்லோரும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
எங்களுடைய இனம் படுகின்ற துன்பங்கள், பட்ட துன்பங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு அகிம்சை ரீதியில் போராட நினைக்கின்ற ஒரு எழுச்சியாக மாறுகின்ற தன்மை ஏற்படுகின்ற போது நாங்கள் மௌனமாக இருக்கின்றோம். ஆனால் தேசியம் பேசுகின்றோம். போராட்டத்தின் கடைசி நாட்கள் எண்ணப்படுகின்ற போது விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலே எத்தனை பேர் நாங்கள் அதற்கு ஆதரவாக என்னுடைய இனம் அழிகிறது. எங்களுடைய சொந்தங்கள் அழிகிறது என அதற்கு ஆதரவாக ஏதாவது செய்திருக்கிறோம். கொண்டாட்டங்கள் நடந்தது. கலியாண வீடுகள் நடந்தது. எல்லா கொண்டாட்டங்களும் நடந்தது. அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று இருந்தோம். இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பார்த்துக் கொள்ளும் என்கிறோம். அதற்கு பல விமர்சனங்கள்.
30 வருடங்கள் ஆயுதப் போராட்டத்தில் முப்படையையும் கொண்ட நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. காரணம் சர்வதேசத்தை நாங்கள் மதிக்காத தன்மையால் சர்வதேசம் இவர்களை அடக்க முடியாது என்று நினைத்து அழித்தார்கள். ஒருவருடத்திலே 2017 இல் தீர்வு கிடைக்கும் என்று சொன்னார்கள். சம்மந்தன் ஐயா சொன்னதாக பல விமர்சனங்கள். சம்மந்தன் ஐயா ஒரு கருத்தை தவறுதலாக சொல்லி விட்டாரோ அல்லது அப்படி தான் சொன்னாலும் முப்படைகளையும் கொண்ட எங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஒரு வருடத்தில் எப்படி சாதிக்க முடியும். அதனால் நாங்கள் எல்லாம் சொல்பவர்கள் பின்னால் செல்கின்றோம். நாங்கள் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஐயா சொன்னார் என்றால் அவர் ஏதோவொரு சிந்தனையில் சொல்லியிருக்கலாம். இந்த அரசாங்கத்திடம் ஒரு வருடத்திற்குள் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் எல்லாம் நம்பினோம் பாருறங்கள். இப்பொழுது ஐயாவை விமர்சனம் செய்கிறோம். இவர் சொன்னார் நடக்கவில்லை. நாங்கள் எல்லோரும் யாரு..? எங்களைப் பொறுத்தமட்டில் சர்வதேசத்திடம் நியாயம் கேட்கின்ற ஒரு வழிமுறை தான் இதுவே தவிர, அரசாங்கத்திடம் சரணாகதி இல்லை. சர்வதேசம் ஜனநாயத்தைப் பேசுகிறது. ஐ.நா சபையில் எங்களுக்காக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவை அத்தனைக்கும் நியாயம் கேட்கும் வகையில் நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறோம். தான் ஒரு ஜனநாயகவாதி என்று ஜனாதிபதி சொன்னார். புதிய அரசாங்கம் எங்களது இனத்திற்கு ஒரு தீர்வைத் தரும் என்று சொன்னார். இவையெல்லாம் ஒரு வசப்பு வார்த்தைகள். சர்வதேசம் நியாயத்தை தரவேண்டும். அதற்கான வழிமுறை தான் இதுவே தவிர எம் இனத்தை காட்டிக் கொடுக்கின்ற வழிமுறையில்லை. அப்படி காட்டிக்கொடுக்க நினைத்திருந்த நிலை இருக்குமாக இருந்தால் எல்லோரும் அமைச்சரவையில் அங்கம் வகித்திருக்க முடியும். கேப்பாபுலவு போராட்டத்தை நியாயப்படுத்தியிருக்க முடியும். அரசாங்கம் செய்வது சரியென்று. எங்களது போராட்டத்தில் முப்படைகளையும் கொண்டு இருக்கின்ற போது சர்வதேசத்தில் ஒரு நாட்டைக் கூட எங்களது பக்கம் வைத்திருக்காத அந்த பலவீனம் தான் இன்றைக்கு எங்களை துளைத்திருக்கிறது.
இன்றைக்கு ஜனநாயக ரீதியில் சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் வகையில் எமது நடவடிக்கைகள் மாறிக் கொண்டு வருகிறது. ஆகவே நாங்கள் எங்களது இனத்தை அடைமானம் வைத்து சோரம் போய் வழிநடத்தவில்லை. என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். பார்வையாளராக இருக்க வேண்டாம். விமர்சனங்கள் வேண்டும் அவை மனதைத் தாக்குகின்ற விமர்சனங்களாக இருக்க கூடாது.
நாங்கள் எல்லோரும் எங்களுடைய அரசாங்கம் வருகின்றது என்று தான் மாகாணசபைக்கு வாக்கு போட்டோம். சிறிலங்கா அரசை கேள்வி கேட்கிறோம். சிறிலங்கா அரசில் நம்பிக்கையில்லை. அதை விடுங்கள். மாகாணசபை என்பது எங்களுடையது. அதிகாரம் என்பது நாங்கள் பெற வேண்டும். தட்டிப்பறிக்க வேண்டும். அதிகாரம் தரவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். வெறும் பேச்சுக்களைப் பேசுவதில் அர்த்தமில்லை. இன்றைக்கு எமது மாகாணம் பின்தங்கி இருக்கிறது என்றால் யாருடைய பலவீனம். எங்களது உள்வீதிகள் பாழாய் போயுள்ளது என்றால் யாருடைய பலவீனம். எங்களுடைய நிலங்களிலே இராணுவம் இருக்கின்றது என்றால் எங்களுடைய பலவீனம். ஒரு அதிகாரி, ஒரு நிர்வாகம் இந்த மாகாணசபைக்கு அடங்கவில்லை என்றால் தட்டிக்கேட்கவேண்டியது எங்னளது கடமை. நாங்கள் எப்பொழுதும் மத்திய அரசாங்கத்தை தான் பேசுகிறோம். அதில் வேலையில்லை. சர்வதேசத்திடம் நியாயம் கேட்பது தான் எங்களது வேலை. அதேபோல் எங்களது அரசு என்கின்ற இந்த மாகாணசபை இரண்டு விடயங்களில் எங்களது மக்களுக்கு நியாயம் செலுத்த வேண்டும். அபிவிருத்தி, இனப்பிரச்சனை என்கின்ற இரண்டு விடயத்திலும் மாகாணசபை தனது அதிகாரத்தை எடுக்க வேண்டும். அகிம்சை போராட்டங்களை எமது தலைவர்கள் செய்கின்ற போது எப்படி ஆயுதங்களை தூக்கினோம். அதிகாரங்களை நாங்கள் கையில் எடுத்ததால் தான் அது நடந்தது. ஆகவே கிடைக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு நாம் அதனைக் கூட பெற முயலவேண்டும். எனவே எல்லோருக்கும் கடமை இருக்கிறது. உணர்வு இருக்கிறது. விடுதலை என்ற அந்த வேட்கை இருக்கிறது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
N5




