செய்திகள்

மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பினருக்கு டக்ளஸ் விடுக்கும் அழைப்பு!

மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் அரசியல் சூழலை தமிழ் தரப்புகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

குறுகிய நலன்களையும், தேர்தல் அரசியல் தொடர்பான சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனை பாதுகாத்துக்கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாம் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை வென்றெடுப்பது தொடர்பில் சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்குமெனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

-(3)