மாணவர் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு: ஜே.வி.பி.குற்றச்சாட்டு
பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்திருக்கும் ஜே.வி.பி, இத்தாக்குதலுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
திறந்த பல்கலைக்கழகத்தில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பது, பாடசாலைகளில் பணம் அறவிடுவதை சட்டரீதியாக்குவதைத் தடுப்பது, மாலபே மற்றும் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வது, அதிகரிக்கப்பட்ட மகாபொல கட்டணத்தை மீண்டும் குறைப்பதை நிறுத்துவது போன்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர்.
தமது கோரிக்கைகள் குறித்து அரசாங் கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்தபோதும் அனுமதி வழங்கப் படாதமையாலேயே அவர்கள் கண்டனப் பேரணியை நடத்துவதற்குத் தள்ளப் பட்டதாக ஜே.வி.பி விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரணியாகச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்களை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. கடந்த அரசாங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலைப் போன்றே இந்த அரசாங் கத்தின் நடவடிக்கையும் அமைந்திருப்பதாக ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியதுடன், துப்பாக்கிப் பிரயோகங் களையும் நடத்தியிருந்தது.




