செய்திகள்

மாண்டஸ் புயல் – வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த 5-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக நேற்று மாலை மாறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றிரவு தான் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு “மாண்டஸ்” என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இதேவேளை மாண்டஸ் புயல் காரணமாக வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.(15)