செய்திகள்

ஒருங்கிணைந்த உபாயங்கள் திட்டமிடல்களுடன் செயற்படும் சிங்கள தலைமைகளும் தன்னிச்சை அரசியலில் ஈடுபடும் தமிழ் தலைமைகளும்

லோ.விஜயநாதன்

சிறிலங்காவின் பாராளுமன்றம் யூன் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனியே சிறிலங்காவின் அரசியல் களம் மட்டுமல்லாது அதுசார் பூகோள அரசியல் நகர்வுகளும் மீண்டும் கொதிநிலைக்குச் சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக மகிந்த ரராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடான மீள் அரசியல் பிரவேச அறிவிப்பானது இந்த நகர்வுகளின் கவனத்தை மேலும் ஈர்த்திருக்கிறது. எந்தச் சக்திகள் மகிந்தவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க முன்னின்றனவோ அதே சக்திகள் இம்முறையும் அவரின் மீள் எழுச்சியை தடுப்பதற்கு முயலும் அதேவேளை அவரின் தோல்வியினால் பாதிக்கப்பட்ட சக்திகள் அவரை ஆட்சி பீடக் கட்டமைப்பில் இருந்துவதற்கு முயன்றுவருகின்றன. இச் சக்திகளை இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி நடக்கும் பூகோள அரசியலை அறிந்தவர்களுக்கு இலகுவாக இனங்காண முடியும்.

cbk-mr-sf-guardian1சிங்கள தேசமானது என்னதான் அவர்களுக்கிடையேயான கட்சி அரசியல் போட்டித்தன்மையக் கொண்டிருந்தாலும் தமிழர்களை அடக்கி ஆள்வதில் அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்த நகர்வுகளையே மேற்கொண்டுவருகிறார்கள். இது அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியினூடாகவும் தெரிகின்றது. அந்த வகையில் போர்குற்றங்களை செய்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவியுயர்வகளும், பட்டங்களும், வெளிநாட்டுத் தூதுவர் நியமனங்களும் வழங்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்ட அதேவேளை புதிய ஆட்சி அமைக்கப்பட்டதைக் காரணங்காட்டி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் போர்குற்ற விசாரணை அறிக்கையை 6 மாதகாலத்திற்குப் பிற்போட்டுள்ளது. இதற்காக பல வாக்குறுதிகளை வழங்கி அவற்றுள் ஒன்றையேனும் நிறைவேற்றாமல், தற்போது மற்றொரு புதிய ஆட்சியைக் காரணம் காட்டி அறிக்கைக்குப் பின்னரான செயற்பாடுகளை முடக்குவதற்கு அல்லது இழுத்தடிப்பதற்கு சிங்கள தேசம் முனைந்துள்ளது.

எந்த உள்ளக விசாரணைக்கான பொறிமுறையை யூலை மாதத்தில் ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் தலைவருக்கு வாக்குக் கொடுத்தார்களோ அதனை தற்போது விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அப்படியானால் ஏன் இந்த அறிக்கை கடந்த மார்ச் மாதத்தில் வெளிவருவதை ஒத்திப்போடுமாறு மன்றாட்டமாக வேண்டி நின்றார்கள்? இங்கே தான் இவர்களின் உண்மையான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது சிறிலங்காவானது போர்குற்ற விசாரணையையோ அல்லது பொறுப்புக் கூறலையோ ஒரு போதும் ஏற்றுக்கொள்வதற்கு தயார் இல்லை என்பதாகும்.

thediplomat_2015-01-13_12-45-50-386x267இதை மேலும் வலுப்படுத்தும் முகமாகவே தேர்தல் திகதியானது விசாரணை அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் அதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எவரை சர்வாதிகாரி, ஊழல்வாதி எனக் கூறி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்தனரோ, அவரையே தற்போது ஒரு முக்கிய வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினூடாக (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியினூடாக) போட்டியிடுவதற்கு சிங்கள தேசியவாதிகள் அனுமதித்துள்ளனர்.

DSCN3515தேர்தல் திகதியானது, மேலும் கால அவசகாசத்தை கோருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அல்லது வெளிவரும் அறிக்கையின் கடினத்தன்மையை பூகோள நலன்சார் சக்திகள் சிறிலங்காவில் தமது நலன்சார் ஆட்சியை தக்கவைப்பதற்காக குறைக்க முன்னையலாம் என்ற கணிப்பீடுகளுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏன் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றியபின் 20வது திருத்தமான தேர்தல் மறுசீரமைப்புக்கு தற்போதைய சூழ்நிலையில் எந்த சாத்தியம்மும் இல்லை என தெரிந்திருந்தும் பாராளுமன்றத்தை கலைக்க சிங்கள தேசம் முடிவெடுக்கவில்லை என்ற சிறு கேள்வி இதனை புரியவைப்பதாக இருக்கிறது.

mahinda-rajapakseஇதேவேளை, மகிந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக களமிறக்குவதனூடாக அவர் சார்ந்த கட்சி பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறுமிடத்து அவரை பிரதமராக அல்லது தோல்வியடையுமிடத்து எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதன் மூலம் அவருக்கான இராஜதந்திர பாதுகாப்பை வழங்க முடியும் என்பதுடன் ஏற்படப்போகும்/ ஏற்படுதப்படப்போகும் அரசியல் அழுத்தத்தைக் காரணம் காட்டி போர்க்குற்ற விசாரணையையும் அதனுடன் இணைந்த செயற்பாடுகளையும் முற்றாக முடக்குவதற்கான மிகவும் சாதுரியமான நுண்ணிய திட்டமிடலை சிறிலங்கா வகுத்துள்ளது.

TNA-Sampanthan-Sumanthiranசிங்கள தேசத்தின் நடவடிக்கைகள் இப்படி இருக்க, தமிழ் மக்களின் நிலையானது 60வது வருட போராட்டத்தினூடாக பெற்றெடுத்த ஒரு சில அரசியல் அங்கீகாரங்களையும் போட்டுடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதற்கு முற்றுமுழுதாக பெறுப்பானவர்களாக மூத்த தமிழ்த் தலைமைகளே காரணமாகவுள்ளனர். சிலர் கட்சியையும் தலைமைத்துவங்களையும் தமது பிரத்தியேக நலனை முன்னிலைப்படுத்த பயன்படுத்துகின்றனரே தவிர தமிழ் மக்களின் நலனை முதன்மைப்படுத்த தவறுகின்றனர். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும் விடயங்களில் தனி நபர்கள் தீர்மானங்களை எடுத்துச் செயற்பட்ட சில சம்பவங்கள் நிகழப்போகும் சில எதிர்கால அபாயங்களை கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

புதிய ஆட்சி,புதிய மாற்றம், புதிய நம்பிக்கை, புதிய நல்லிணக்கம், இணைந்து செயற்படுத்துவதற்கான புலம்பெயர் தமிழ் மக்களுக்கான அழைப்பு என்று இறுதிவரை கண்கட்டி வித்தைகாட்டி விட்டு இப்போது இவர்கள் எட்டாக் கனி திண்டால் புளிக்கும் என தமிழ் மக்களை முட்டாள்களாக்க பார்க்கின்றனர். ஜனாதிபதி மைத்திரி தமக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார், அவர் முன்னைய தலைவர் போன்றல்ல என்று கூறித்திரிந்தவர்களுக்கு அமையப்போகும் ஆட்சி கட்டமைப்பு பற்றி கூட தெரிந்திருக்கவில்லை. எதிர்வரும் தேர்தலின் பின்னர் பிரதமரே நிறைவேற்று அதிகாரம் உள்ளவராக இருப்பார். அதாவது 1994 களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த டி. பி. விஜேயதுங்க நிறைவேற்று ஜனாதிபதியா இருந்தபோதும் எப்படி சந்திரிகா நிறைவேற்று அதிகாரம் உடைய பிரதமர்போல் செயட்பட்டாரோ அதேபோல் ஆனால் உண்மையிலேயே நிறைவேற்று அதிகாரம் உடைய பிரதமரை கொண்டதாக எதிர்வரும் ஆட்சி அமையவுள்ளது.

TNA press at hrc25அந்தவகையில் தமிழ் தலைமகளுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய சரியான புரிதலின்மையே இவர்களின் இத்தகைய செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டமானது தனியே சிங்கள ஆட்சியாளர்களுக்கெதிரானதன்று. அது தமிழ்மக்களை காலம்காலமாக அடக்கி ஆள நினைக்கும் சிங்கள தேசத்துக்கெதிரான போராட்டமாகவே இருந்து வருகின்றது. காலம் காலமாக மாறி மாறி ஆட்சி பீடம் ஏறியவர்களால் எத்தனை தடவைகள் தமிழ்த் தலைமைகள் ஏமாற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றுப் பட்டறிவு கூட இல்லாமல், அன்றைய சூழ்நிலைகள் வேறு இன்றைய சூழ்நிலைகள் வேறு என்று தமது செயலை நியாயப்படுத்தும் தலைமைகளையே தமிழ் மக்கள் கொண்டிருக்க நேர்ந்திருக்கின்றமை எம்மினத்தின் சாபக்கேடாகவேயுள்ளது. “கீரைக்கடைக்கும் எதிர்க்கடை இருக்க வேண்டும்” என்பார்கள். ஆனால் அந்த நிலை தமிழ் அரசியல் களத்திலில் இன்று இல்லாமல் இருக்கின்றமையே தமிழ் தலைமைகளின் இன்றைய தான்தோன்றித்தனமான அரசியலுக்கு காரணமாக இருக்கிறது.

VETEமறுபுறத்தில் சிதைந்து கிடக்கின்ற தமிழ் தேசியத்தை மேலும் சிதைக்குமுகமாக இலங்கை இந்திய புலனாய்வுக் கட்டமைப்புக்களின் மறைமுக திட்டமிடழுக்கமைய முன்னாள் போராளிகள் என்ற போர்வையில் “ஜனநாயகப் போராளிகள்” என்ற புதிய கட்சி தமிழர் தாயகத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. இவர்களின் கோரிக்கை என்னவென்று பார்த்தால், அது சிறிலங்கா படையின் துணை ஆயுதக் குழுவான EPDP கட்சி முதல் பிரதான சிங்கள கட்சிகளில் உள்ள தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்கள் உட்பட எந்தவொரு தமிழ் கட்சியும் முன்வைக்கும் ஆகக் குறைந்த கோரிக்கைகளே இருக்கின்றன. இது ஒன்றே அவர்களின் உண்மையான நிகழ்ச்சி நிரல் எது என்பதை காட்டுகிறது. தமிழ்த்தேசியத்தை சிதைப்பதற்காக மிகவும் நுட்பமான முறையில் கோர்க்கப்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.

சிறிலங்கா அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளைக் கொண்டே இந்த ‘ ஜனநாயக போராளிகள்’ கட்சி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் புனர்வாழ்வை அவர்கள் எத்தகைய ஒரு சூழலில் யார் மூலம் பெற்றார்கள் என்பது எந்தவொரு சாதாரண தமிழ் பொதுமகனுக்கும் தெரிந்த விடயம். இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பல முன்னாள் போராளிகள் உணர்ச்சிகள் மறக்கடிக்கப்பட்ட நடைப்பிணங்களாக சிறிலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்பின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். யதார்த்தம் இப்படி இருக்க இக்கட்சியானது முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்டது என்பது ‘தமிழிழ விடுதலைப் புலிகள்’ என்ற தோற்றத்தை உருவாக்க முற்படுவது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானது.

timthumbஇதன் மூலம் விடுதலைப்புலிகளின் ஒப்பற்ற தியாகத்தையும் அதன் பலாபலன்களையும் மழுங்கடிப்பதே நோக்கமாக காணப்படுகிறது. அத்துடன், இக் கட்சியை எதிர்வரும் தேர்தலில் களமிறக்குவதினூடாக தமிழ்மக்களின் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் அதேவேளை இக்கட்சியின் தேர்தல் தோல்வியை பெரிதுபடுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி புலிகளின் போராட்டம் மக்கள் ஆதரவற்ற ஒரு பயங்கரவாதப் போராட்டம் என்று சித்தரிப்பதுடன் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எந்தவித பிரச்சினையுமில்லை என்ற பரப்புரையை மேற்கொள்வதும் இதன் பின்னால் நின்று செயற்படுபவர்களின் நோக்கமாக இருக்கலாம்.

இதேசமயம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வடகிழக்கு மக்கள் வழங்கிய வாக்களிப்பின் அளவைக் கண்டு பெரும்பாலான சிங்களக்கட்சிகள் இம்முறை வடகிழக்கை மைப்படுத்தி தமது செயற்பாடுகளை விரிவாக்கி உள்ளனர். இதனூடாக ஒரு சில இடங்களை கூடுதலாக பிடிப்பதற்கும் தேசியப்பட்டிலுக்கான வாக்குகளை அதிகரிப்பதற்கும் இவர்கள் முற்பட்டுள்ளனர்.

map_jaffna_pமறுபுறத்தில் யாழ்ப்பாண பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையானது 9 இலிருந்து 7 ஆக வாக்களார்களின் எண்ணிக்கையை வைத்து குறைக்கப்பட்டுள்ளது. 1995 இல் ஏற்பட்ட இடம்பெயர்வைத் தொடர்ந்து யாழ்பாண வாக்களார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டது. அதன் பின்னர் 4 முறை பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன.ஆனால் தற்போது மட்டுமே வாக்களார்களின் எண்ணிக்கையைக் காரணம்காட்டி பாராளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளன . வழக்கம் போல் இதற்கும் எமது தலைவர்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனிகளாகியுள்ளனர். வடகிழக்கில் காணமல் போனவர்களுக்கான ஸ்ரீலங்கா அரசின் விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை, இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானோர் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியவில்லை, பல ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் பிடிக்குள் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இருக்கின்றன, யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேறமுடியாத சூழ்நிலையில் உள்ளனர், இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் உள்ளது, இப்படியான பல அசாதாரண சூழ்நிலைகளை காரணம்காட்டி குறைந்தபட்சம் சிறிலங்காவின் நீதிமன்றத்தில் பாராளுமன்ற எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு எதிராக சிறிலங்காவின் நீதித்துறையில் நம்பிக்கையை இல்லாவிடினும் ஒரு வழக்கைத் தொடர்ந்து உண்மை நிலையை உலகுக்கு உணர்த்த எமது சட்ட வல்லுணர்களான தமிழ் தலைமைகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

kerry-tamilதமது உரிமைக்காக அளப்பெரும் பல தியாகங்களை செய்து பேராடிய தமிழ்சமூகம், இன்று எதற்கெடுத்தாலும் அடுத்தவர் வந்து தமக்காக போராடுவார்கள் என்ற சிந்தனையுடனேயே இன்று பயணிக்கின்றது. சிங்கள தேசமானது நிறுவனப்படுத்தப்பட்ட ஆட்சிக்கட்டமைப்பினூடாகவே தமிழ் தேசியத்தை ஒடுக்குவதற்கு அன்று தொட்டு இன்று வரை செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் தேசியத்தை பாதுகாக்க முனைபவர்களாக கூறிக்கொள்ளும் கட்சிகளின் கூட்டான தமிழ் தேசிய கூட்டமைப்பு தனி நபர்கள் எடுக்கும் முடிவை மையப்படுத்தியே செயற்பட்டுவருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியைக் கூட முறையாக பதிவுசெய்து செயற்படுவதற்கு முடியாமல் இருப்பவர்கள் , எப்போது தமிழ் தேசிய போரட்டத்தை நிறுவனமயப்படுத்தி நடத்தப்போகிறார்கள்?

DSC-0132-e1436191402892

புதிய சிந்தனை, புது இரத்தம், புதிய கற்பனை என்பவற்றுக்கு இடமளிக்காமல், முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் வெற்றிக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வகையில் கூட்டமைப்பின் ஆசனங்களுக்கான தெரிவு அமைந்திருக்கிறது. மறுபுறத்தில், இத்தனை குழப்பங்கள் பிளவுகளின் மத்தியிலும் எதிர்காலத்தில் சிங்கள தேசத்தின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அறிவும் ஆற்றலும் மிக்க இளைஞர் யுவதிகளுக்கு இந்த தேர்தலில் கணிசமான சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று இரு பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக கூறி அதனை செயற்படுத்தியும் வருகிறார்கள்.

3925a7dc7e34492d9df1344fb21db012_18இதேவளை, மகிந்த ராஜபக்ச மீண்டும் புலிப்பூச்சாண்டி என்ற தனது ஒரே அஸ்திரத்தையே இம்முறையம் தேர்தலுக்காக எடுத்துள்ளார். அவர் இக்கோசத்தினூடாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலோ அல்லது தோல்வியைத் தழுவிக்கொண்டாலோ, இதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து இரண்டுமே தமிழ்மக்களுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்படுத்தும். இனப்பற்றுடன் கூடிய தூரப் பார்வையும், ஒன்றிணைந்து வகுத்த தந்திரோபாயங்களும் நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளும் இன்றி முன்னர் போலவே ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாடுகளின் பின்னே தமிழர் அரசியல் இழுபட்டு செல்லும் நிலைமை மீண்டும் உருவானால், தமிழ் தேசியமானது இந்து சமுத்திரத்தை மையப்படுத்தி நகரும் பூகோள அரசியல் சூறாவழியில் சிக்கி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவதை யாரும் தடுத்துவிட முடியாது.