செய்திகள்

மீண்டும் இலங்கை செல்ல மாட்டேன்- இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்ட ரேணுகரூபன்

இலங்கைக்கு திருமணத்திற்காக சென்றிருந்தவேளை அங்கு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் பிரிட்டன் பிரஜையொருவர் நாடு திரும்பியுள்ளார்.அவரை விடுவிப்பதற்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பேராட்டங்களை தொடர்ந்தே அவர் மீண்டும் பிரிட்டன் திரும்பியுள்ளார்.

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சும்,இலங்கையில் உள்ள பிரபல மனித உரிமை சட்டத்தரணியும்,லண்டனில் உள்ள அவரது குடும்பத்தவர்களும் மேற்கொண்;ட தீவிரமுயற்சியின் பலனாகவே அவர் நாடு திரும்பியுள்ளார்.

தீபாவிநாயகமூர்த்தியை திருமணம் செய்வதற்காக யூன் முதலாம் திகதி ரேணுகரூபன் இலங்கைக்கு சென்றிருந்தார்,அவர்களுடைய திருமணம் 8 ம் திகதி நடைபெறவிருந்தது,அவர் தனது மனைவியுடன் 23 ம் திகதி இலங்கை திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார்.

எனினும் ரேணுகரூபன் யாழ்ப்பாணத்திலுள்ள தனது வீட்டிற்கு திரும்பிய அன்றைய தினமே மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் அவரது தாயாரின் – மூத்த சகோதரியின் முன்னிலையில் ரேணுகரூபனை தாக்கியதுடன்,பலவந்தமாக அவரை வானில் ஏற்றி கொண்;டுசென்றனர்,விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

4096

அவரது குடும்பத்தினரின் தீவிரதேடுதலிற்கு பின்னரே அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்,சித்திரவதையால் ஏற்படும் காயங்களை அவரிடம் காணமுடிந்தது என தெரிவிக்கின்றார்  ரேணுகரூபனின் சட்டத்தரணியான அன்டன் புனிதநாயகம்.

இதேவேளை தனக்கு நிகழ்ந்தவற்றை ரேணுகரூபன் இவ்வாறு வர்ணித்தார்:

நான் எனது தாயரின் வீட்டில் இருந்த என்னை கைதுசெய்தவர்கள்  வான் ஓன்றிற்குள் என்னை திணித்தனர்.  பின்னர் அவர்கள் என்னை வானிற்குள் வைத்து  தாக்கதொடங்கினர். குறிப்பிட்ட வாகனம் யாழ்ப்பாணத்தில உள்ள பாழடைந்த வீடொன்றிற்கு சென்றது. அது அவர்கள் சித்திரவதைக்காக பயன்படுத்தும் வீடாகயிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். சுவரில் இரத்தக்கறைகளை காணமுடிந்தது. என்னை பொல்லால் தாக்கினார்கள், இரும்புக்கம்பியால் தலையிலும், முகத்திலும் தாக்கினார்கள் அதனை தொடர்ந்து நான் மயக்கமடைந்தேன் என அவர் தெரிவித்தார்.

அவர்கள் எனக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டினார்கள். நான் மீண்டும் மீண்டும் அவர்களிற்கு நான் பல வருடங்களாக பிரிட்டனில் வாழ்கிறேன், எனக்கு விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லை என தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை, ஒரு கட்டத்தில் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன், எனவும் ரேணுகரூபன் தெரிவித்தார்.

பின்னர் அவரை அவர்கள் யாழ்சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அவரது சட்டத்தரணியின் அழுத்தங்கள் காரணமாக ரேணுகரூபன் யாழ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரிற்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் 16 வருடங்கள் பிரிட்டனில் வாழ்ந்த ரேணுகரூபனை அவர்கள் யாழ்நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நபர் ஓருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டை சுமத்தினர். எனினும் ரேணுகரூபனால் தாக்கப்பட்டவர் என எவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை இதனை தொடர்ந்து குறிப்பிட்ட வழக்கு கைவிடப்பட்டது,

இலங்கையில் வாழ்ந்தவேளை அவரிற்கு விடுதலைப்புலிகளுடன் இருந்த தொடர்பே அவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு காரணம்  அவரின் குடும்பத்தவர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் ண்டனின் ஹீத்துரு விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த ரேணுகரூபன் நடக்க முடியாமல் நொண்டுகின்றார், பலத்த தலைவலி குறித்து முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை லண்டன் சென்றதும தீவிர மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் மேற்கு லண்டனில் உள்ள மருத்துவர் ஓருவரை சென்று பார்த்துள்ளார். அந்த மருத்துவர் அவரிடம் தலையை ஸ்கான் செய்யவேண்டும்  என தெரிவித்துள்ளார்.

ரேணுகரூபன் குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகள்-தடுத்துவைக்கப்பட்டவேளை தாக்கப்பட்டார். அதன் காரணமாக கடும் பாதிப்பு என தெரிவிக்கின்றன.

லண்டனில் வாழும் ரேணுகரூபனின் சகோதரி லலிதாரூபி  தனது சகோரதர் திரும்பிவந்தது மகிழ்ச்சியளிக்கின்றது, ஆனால் அவரது தலையில் காயங்கள் இருக்கலாம் என அச்சமடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்

இலங்கையில் சித்திரவதை செய்யப்படுபவர்களிற்கு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுவது வழமைக்கு மாறான விடயம்.  பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சும், மனித உரிமை அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமுமே அதற்கு காரணம் என ரேணுகரூபனின் சட்டத்தரணி புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.

ரேணுகரூபன் கடும்காயங்களிற்கு மத்தியிலும் திருமணத்தை முடித்துக்கொண்டு லண்டன் திரும்பியுள்ளார்.

திருமணத்திற்காக இலங்கைக்கு சென்ற வேளை  புதிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கை குறித்த கனவுகள் என்னிடம் இருந்தன.  எனினும் மிகமோசமான விடயங்கள் இடம்பெற்றன, திருமணநாள் அன்று நான் அச்சப்பட்டவனாக, கவலையடைந்தவனாக காணப்பட்டேன். எனது மனைவிக்கு விசா கிடைப்பதற்கு முன்னரே நான் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டிய நிலை காணப்பட்டது. எனது மனைவி தற்போது இலங்கையில் ஓளிந்து வாழ்கின்றார். அவரை விரைவில் லண்டனிற்கு அழைக்கலாம் என நம்புகிறேன். நான் இனி ஒருபோதும் இலங்கை செல்லப்போவதில்லை.

4096 (1)இலங்கை அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ள ரேணுகரூபனின் பிரிட்டன் வழக்கறிஞர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளதால் நாங்கள் இந்த வழக்கை மேலும் உறுதியாக முன்னெடுக்கவுள்ளோம். இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவரிற்கு நஸ்டஈடு வழங்கவேண்டும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச வழக்கை தாக்கல் செய்யப்போகின்றோம் என குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் எந்த கருத்தையும் வெளியிட மறுத்துள்ளது.