மீண்டும் பிரபாகரனுக்கு உயிர்கொடுக்கும் வகையில் யாழ்.சம்பவம் : சம்பிக்க
அதியுச்ச அதிகார பகிர்வுகளையும், முரண்பாடான கொள்கைகளையும் முன்வைத்துக்கொண்டு நாட்டின் போக்கினை வேறு திசைக்கு திருப்பும் முயற்சிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் சர்வதேச அழுத்தங்களை நாட்டுக்குள் கொண்டுவரும் அரசியல் நகர்வுகளையே முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மீண்டும் பிரபாகரனுக்கு உயிர்கொடுக்கும் வகையிலேயே யாழ். பல்கலைக்கழக சம்பவம் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அதற்கமைய அரசாங்கம் அரசியலமைப்பை உருவாக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளமை மற்றும் யாழ்.பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் தீர்வு தொடர்பில் பேசும் நபர்கள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவும் தயாராக உள்ளனர். இன்று வடக்கில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நாட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. யுத்தத்தை வென்றெடுத்ததில் இருந்து நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நல்லாட்சி அரசில் வடக்கு, கிழக்கில் பாரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். எனினும் இன்றும் ஒருசிலர் அதியுச்ச அதிகார பகிர்வுகளையும், முரண்பாடான கொள்கைகளையும் முன்வைக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றும் சர்வதேச அழுத்தங்களை நாட்டுக்குள் கொண்டுவரும் அரசியல் நகர்வுகளையே முன்னெடுத்து வருகின்றது.
மேலும் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். மாணவர்கள் மத்தியில் வன்முறைகளும், முரண்பாடுகளும் ஏற்படுவது சமுதாயத்தை பாரிய அளவில் பாதிக்கும் விடயமாகும். வடக்கில் நிலைமைகள் சுமுகமாக மாறிவரும் நிலையில் மீண்டும் பாசிசவாதத்தை கையில் எடுக்கும் வகையில் பிரபாகரன் உருவாக்கப்பட வேண்டும் என்ற வகையில் செயற்படுகின்றனர். அதேபோல் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை இனவாதிகள் சிலர் இராணுவத்துடன் தொடர்புபடுத்தி குழப்பங்களை பெரிதுபடுத்தவும் முயற்சித்து வருகின்றனர் என்றார்.
R-06




