மீள்குடியேறிய மக்களின் வாழ்வில் விளையாடிய ‘கச்சான்’
-கே.வாசு-
யுத்த மேகங்கள் மறைந்து அபிவிருத்திகள் ஆங்காங்கே தென்பட்டாலும் எல்லோர் கண்ணிலும் அது தெரிவதாக இல்லை. அன்றாடம் ஒரு வயிறு சோற்றுக்காக போராடும் நிலையிலேயே இன்றும் பல குடும்பங்கள் வன்னியில் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், யுத்தத்தில் காயமடைந்து இயலாமையுடன் வாழும் குடும்பங்கள், கணவன்மாரை காவு கொடுத்துவிட்டு வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. இவர்கள் அன்றாடம் தமது சீவியத்திற்காக பல்வேறு தொழில்களையும் செய்து வருகின்றனர். ஆனால் அதில் கிடைக்கும் வருமானம் தான்…?
தோட்டம் செய்தல், விறகு வெட்டி விற்றல், பாலைப்பழம் விற்றல், தேன் எடுத்தல், வேட்டையாடுதல் என பல தொழில்களை இவர்கள் செய்து வருகின்றனர். இதில் சில தொழில்களை செய்ய முடியாதவாறு அரச அதிகாரிகளின் அழுத்தங்களும் இவர்களுக்கு உண்டு. வன்னியின் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மக்கள் தமது வீட்டுக் காணிகளிலும், தோட்டங்களிலும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கச்சான் செய்கை முக்கியம் பெறுகிறது.
அதிகநம்பிக்கையுடன் கச்சான் பயிர்செய்கையில் ஈடுபட்ட மக்கள் தற்போது அந்த பயிர்செய்கைக்கு செலவு செய்த பணத்தைக் கூட மீள முடியாமல் கஸ்ரப்படும் நிலையில் உள்ளனர். கொட்டித் தீர்த்த மழை காரணமாக கச்சான் பயிர்செய்கை பாதிப்படைந்துள்ளது. கச்சான் செடிகளில் முத்துக்களின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் கடன்வாங்கியும், இருந்த நகைகளை அடைவு வைத்தும் பயிர்செய்கையில் ஈடுபட்டவர்களின் நிலமை தற்போது கண்ணீர் கதையாகிவிட்டது.
கச்சான் செய்தாவது எமது குடும்பத்தை கொண்டு நடத்துவோம் என நினைத்தோம். ஆனால் இந்த மழை கூட எம்மை விட்டு வைக்கவில்லை. மழை காரணமாக வார் அடித்துச் சென்ற வெள்ளத்தால் கச்சான் செய்கை பாதிப்படைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வோம். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை. மூன்று நேரம் சாப்பிடக் கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தித் தாருங்கள். இந்த அரசாங்கம் ஏன் எங்களை புறக்கணிக்கிறது. கச்சான் செய்கையால் பாதிப்படைந்தவர்களுக்கு ஒரு நஸ்ட ஈடும் இல்லை. கூலி வேலை செய்து வாழலாம் என்றால் அது கூட கிடைக்கவில்லை என்கின்றனர் கனகராயன்குளம் பகுதியில் கச்சான் செய்கையில் ஈடுபடும் மக்கள்.
கச்சானுக்கு சந்தையில் சிறந்த கேள்வி இருப்பதால் அதனை மீள்குடியேறிய மக்கள் பயிரிட்டனர். ஆனால் அவர்களின் நிலமை தற்போது கேள்விக்குறியே.
நாளாந்தம் வாழ்வதற்காக போராடும் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது. அரசாங்கம் வாழ்வாதார உதவித்திட்டங்கள், சமுர்த்தித் திட்டங்கள் என்பவற்றை பலருக்கும் வழங்கிவருகின்றது. வடமாகாணசபை கூட வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. ஆனால் அவை யாருக்கு வழங்கப்படுகின்றது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பல குடும்பங்கள் தற்போதும் ஒரு வயிறு சோற்றுக்காக போராடும் நிலையில் இருக்கும் போது அபிவிருத்தி, வாழ்வாதார விருத்தி என கூறுவது எவ்வகையில் பொருத்தமானது. எனவே, இந்த குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்ற இந்த அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் என்ன செய்யப் போகிறார்கள்.
N5




