செய்திகள்

இன்று டில்லி வருகிறார் ஒபாமா வரலாறு காணாத பாதுகாப்பு

இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி வருகை தருகிறார்.  இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவரது இந்தப் பயணத்தின்போது இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், கூட்டாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பது, ஆக்கப்பூர்வ அணுசக்தியில் நிலவும் வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூ விமானப் படை தளத்தில் இருந்து, ஒபாமாவை ஏற்றிக் கொண்டு அதிபரின் பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் இந்தியாவுக்கு சனிக்கிழமை புறப்பட்டது. ஒபாமாவுடன் அவரது மனைவி மிச்செல், நான்சி பெலோசி உள்ளிட்ட அமைச்சர்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் இந்தியா வருகிறது.
00
இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தில்லியின் பாலம் விமானப்படை தளத்தில் அதிபரின் “ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானம், அவரது பாதுகாப்பு விமானம் ஆகியவை தரையிறங்கும். ஒபாமாவை மத்திய அரசு சார்பில் மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்கிறார்.

அங்கிருந்து சர்தார் படேல் மார்கில் உள்ள மௌரியா ஷெரட்டன் ஹோட்டலில் தங்கி அரை மணி நேரம் ஓய்வெடுக்கிறார். நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு இந்திய முப்படையினரின் அணிவகுப்பையும் அவர் பார்வையிடுவார். பின்னர், பகல் 12.30 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று அதிபர் பாரக் ஒபாமா மலரஞ்சலி செலுத்துகிறார். அங்கு அவரது வருகையின் நினைவாக மரக்கன்றையும் நடுகிறார்.

அங்கிருந்து இந்தியா கேட் அருகே உள்ள ஹைதராபாத் இல்லத்துக்குச் செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியும் ஒபாமாவும் இரு தரப்பு நல்லுறவுகள் குறித்து முக்கியப் பேச்சுவார்தையில் ஈடுபடுவர். இச்சந்திப்பின் நிறைவாக பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் பிற்பகல் 3 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர்.