செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை தயாரிப்பு பணிகள் மும்முரம்

மண்பொம்மைக்கு புகழ்பெற்ற வண்டிப்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை செய்யும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது.

கடலூர் வண்டிப்பாளையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண் பொம்மை செய்யும் தொழிலையே நம்பி உள்ளன. குறிப்பாக இந்துக்களின் பண்டிக்கையான கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை மற்றும் கொலு உள்ளிட்ட பண்டிகைகள் அதேபோல் கிருத்துவ பண்டிகையான கிருஸ்துமஸ் பொம்மைகள் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கு இங்கு அழகான வண்ண பொம்மைகள் தயரிக்கப்படுவதாக கூறுகின்றார் ஒரு பொம்மை கலைஞர்.

30 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை விலையுள்ள பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வண்டிபாளையத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருடம் முழுவதும் பொம்மைகள் செய்தாலும் இதுபோன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே விற்பனை அதிகரிப்பதாகவும் இதனால் தங்களுக்கு நிலையான வருமானம் இல்லை என்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் 25ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளதாக வண்டிப்பாளையம் பொம்மை கலைஞர்கள் கூறுகின்றனர். களி மண் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல், அதன் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக தங்களால் உரிய லாபம் ஈட்டமுடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக இந்த பொம்மை கலைஞர்கள் தங்களது அடுத்த தலைமுறையினருக்கு இந்த கலையை கற்றுத்தர தயக்கம் காட்டுகின்றனர். கலையையும் கலைஞர்களையும் காப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து மாநில அரசு இவர்களது வாழ்வாதாரத்திற்க்கு வழிசெய்ய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

N5