செய்திகள்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஜூன் 27 இல் இடைத்தேர்தல்! ஜெயலலிதா போட்டியிடுவார்

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து, ஜெயலலிதாவிடம் இருந்து முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதையடுத்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த சனிக்கிமை மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அதற்கு முன்னதாக, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், கடந்த 17ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

முதலமைச்சராக பதவியேற்கும் ஒருவர் 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதால், தற்போது காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜூன் 27ஆம் தேதி ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மனுத்தாக்கல் ஜூன் 3ஆம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கல் செய்ய ஜூன் 10ஆம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 11ஆம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற ஜூன் 13ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த இடைத்தேர்தலின் வாக்குகள் ஜூன் 30 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே அறிவிக்கப்படும். ஜூன் 27ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மேலும், 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

இதேபோல், கேரளாவின் அருவிக்கரா, மத்திய பிரேசத்தின் கரோத், திரிபுராவின் பிரதாப்கர், கர்மா, மேகாலயாவின் சோக்போட் ஆகிய தொகுதிகளுக்கும் ஜூன் 27ல் இடைத்தேர்தல் நடக்கிறது.