செய்திகள்

ஜெயலலிதாவுக்கு சுவாசத்துக்கான சிகிச்சை உன்னிப்பாக கவனிப்பு: அப்பல்லோ மருத்துவமனை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சுவாசத்துக்கான ஆதரவு சிகிச்சை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது என்று அப்பல்லோ மருத்துவமனை சனிக்கிழமை  தெரிவித்துள்ளது.

காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு, கடந்த 18 நாள்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் தலைமைச் செயலக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:-

“நுரையீரல் சிகிச்சை உள்ளிட்ட தீவிர சிகிச்சை நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் முதல்வரின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சுவாசத்துக்கான சிகிச்சை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு, தேவைக்கேற்ப செயற்கை சுவாசம் அளித்தல் சீராக்கப்படுகிறது.

நுரையீரலில் சேர்ந்துள்ள திரவத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து, உடல் உறுப்புகள் அசைவுப் பயிற்சி (பேஸிவ் ஃபிஸியோதெரப்பி) உள்ளிட்ட பிற ஒருங்கிணைந்த சிகிச்சைகளும் முதல்வருக்கு அளிக்கப்படுகின்றன” என்று சுப்பையா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
-06