செய்திகள்

பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்து

தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீராக செயல்பட பொறுப்பு முதல்வரையோ அல்லது புது முதல்வரையோ நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது ஓரிரு நாளில் வீடுதிரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இன்னும் சில நாட்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதல்வர் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவிரி விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை என பல பிரச்சினைகள் சூழ்ந்திருப்பதால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீராக செயல்பட பொறுப்பு முதல்வரையோ அல்லது புது முதல்வரையோ நியமிக்க வேண்டும்.

மத்திய உயர்மட்டக் குழு இன்றும், நாளையும் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால், விவசாய சங்கத்தை சார்திருக்கக் கூடியவர்களுக்கு எந்த தகவலும் இல்லை. எந்தெந்த பகுதிகளுக்கு வருவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று எங்களோடு கலந்து பேசவில்லை என்று விவசாய சங்கத்தினர் கண்டன செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பொதுப்பணித்துறையில் 12 தலைமை பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது, இந்த சூழ்நிலையில் யாரை சந்தித்து விவாதிக்க இருக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை என்றும் விவசாய சங்கத்தினர் வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, ஏற்கெனவே ஆளுநர் தமிழக அமைச்சர்களை அழைத்து காவிரி பிரச்சினை குறித்து பேசியதாக ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக் குறிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த குழு வரவிருக்கின்ற நிலையில், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பற்றியெல்லாம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்னால் சிறப்பாக இருக்கும். அதோடு, தமிழகத்தில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள் மட்டுமல்ல, தமிழக அதிகாரிகளையும் அரவணைத்து, அவர்களோடு இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஆய்வு செய்தால் தான், அது பயனுள்ளதாக அமையும்.

உண்ணாவிரத போராட்டத்தில் என்னுடைய உரையிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன், நியாயமாக ஆளுகிற ஆட்சிதான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், இங்கிருக்கக் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களை விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை எல்லாம் அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்று பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற கோரிக்கையை நான் எடுத்து வைத்திருக்கிறேன்.

அந்தப் பணியை இதுவரையில் ஆளுகிற அரசு செய்வதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. இதுகுறித்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து வருகிறோம். இது தொடருமென்று சொன்னால், எதிர்க்கட்சியான திமுக சார்பில் படிப்படியாக நடவடிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளோம்” என்றார்.
-06