செய்திகள்

முடிவுக்கு வந்தது பொருளாதார மத்திய நிலையப் பிரச்சினை: மாங்குளத்திலும் வவுனியாவிலும் அமைக்க முடிவு

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. மாங்குளத்திலும், வவுனியா மதகுவைத்த குளம் பகுதியிலுமாக இரண்டு பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைக் கூட்டத்தின் இந்த முடிவை அறிவித்தார். தலா பத்து கோடி ரூபா செலவில் இந்த இரண்டு பொருளாதார மையங்களும் அமைக்கப்படும். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மையம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 20 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைகளால், இழுபறி நிலை காணப்பட்டது. ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா இதனை அமைப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பிளவுபட்ட நிலை காணப்பட்டது.

இந்த நிலையில், வவுனியாவிலும், மாங்குளத்திலும் இதனை அமைப்பது என அமைச்சரவை தீர்மானித்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கின்றது.