செய்திகள்

முதலமைச்சருக்கும் ஆளுநருக்குமிடையே முரண்பாடெனவரும் செய்திகள் புனைகதைகளே: ரெஜினோல்ட் குரே

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலே நல்லிணக்கத்தை கட்டியெழுப்புகின்ற செயற்பாடுகளையே நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறதென தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அத்தகைய செயற்பாடுகளையே தானும் பல வழிகளிலும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் புனை கதைகள் என்றும் அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

வடக்கிலே அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் தொடர்பாக மத்திய அரசுக்கும் மாகாணத்திற்கும் இடையிலான உறவு முறை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது;

முன்னைய அரசாங்கமானது நாட்டின் நீதித்துறை உட்பட சகலதுறைகளையும் தனது கைக்குள் வைத்திருந்தது. அதனூடாக அவற்றை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்காது எல்லாவற்றிலும் தான் தலையிட்டிருந்தது.

ஆனால், தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது. சகலதுறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் பொலிஸ் ஆணைக்குழு, பொது நிர்வாக ஆணைக்குழு,நீதி ஆணைக்குழு என சகலதுறைகளுக்கும் ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை இன்று தமது செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்து வருவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையால் நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இத்தகைய நடவடிக்கைகள் ஊடாக வடக்கிலே நல்லாட்சியினை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் எமது நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள், தூதுவர்கள் இந்நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றன இன்னமும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர்.

வடக்கு ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவது போன்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றனர். இவை முற்றிலும் புனைகதை. எதுவித உண்மையும் அற்றவை. எனவே ஊடகங்கள் மக்களுக்கு பொறுப்புக் கூற கூடியனவாக செயற்பட வேண்டும் என்றார்.