முதலமைச்சருக்கு எதிராக தென்னிலங்கையுடன் கைகோர்த்த தமிழரசுக் கட்சி
நரேன்-
தமிழ் மக்களின் உடைய அபிலாசைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான ஒரு செயற்பாடாகவே மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது. அதன் தேர்தல் விஞ்ஞாபனமும் இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கான ஒரு சுயாட்சி அதிகாரத்தை மையப்படுத்தியே அமைந்திருந்தது. அபிவிருத்தியோ அல்லது பொருளாதார முன்னேற்றங்கள் குறித்தோ யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவது குறித்தோ அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனைடிப்படையிலேயே தமிழ் மக்கள் தமது உரிமைக் கோரிக்கை அப்படியே இருக்கிறது என்பதை இலங்கை அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் எடுத்தியம்பும் நோக்கில் வேட்பாளர்கள் யார், அவர்களுக்கு எத்தகைய அரசியல் பின்புலம் உள்ளது, நேர்மையானவர்களா, என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூட்டமைப்பின் சின்னமான தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றியைப் பெற்று தந்திருந்தனர்.
வாக்குகளைப் அபகரித்துக் கொண்ட பின்னர் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் வழங்கிய தமிழரசுக் கட்சி தான்தோன்றித் தனமாக செயற்பட்டதன் விளைவும், அந்த தான்தோன்றித்தனம் மக்கள் நலன் சார்ந்து அமையாத அவலமும் மாகாணசபையை இன்று இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. கிடைத்திருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரத்திலேயே பாரிய ஊழல்களும், அதிகார துஸ்பிரயோகங்களும் நடைபெற்று இருப்பதை சகிக்க முடியாமல் முதலமைச்சர் தமது அமைச்சரவை சகாக்களுக்களின் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஒரு நிர்வாக அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த புதனன்று தனது முடிவை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார்.
இது இப்பொழுது முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணையை கொண்டு வருவதற்கு வழிவகுத்திருக்கிறது. வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் மீதான ஊழல்கள் மற்றும் மோசடிகள் குழுவின் அறிக்கையின் படி நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆகவே அவர்கள் தாமாகவே முன்வந்து பதவிகளை தியாகம் செய்ய வேண்டும் என்றும் மிகுந்த கௌரவம் மிக்க தொனியில் பேசியிருந்தார். ஏனைய இரண்டு அமைச்சர்களைப் பொறுத்தவரையில் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன என்றும் அவர்கள் மீது ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் போது சாட்சிகள் சமூகம் அளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அவர்களை ஒரு மாத காலத்திற்கு அமைச்சு பதவியில் இருந்து விலகி இருக்குமாறு கோரியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களையும் தான் ஒரு முதலமைச்சராகவும், அரசியல் வாதியாகவும் இருந்து அறிவிக்க வேண்டிய முடிவாக இல்லாமல் தான் முன்னர் வகித்த நீதிபதி பதவியின் மனோநிலையில் இருந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துஇ அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தெரிவித்திருந்தார். இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களிலும், முகநூல்களிலும் வேகமாக பரவி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்தது. இந்த தீர்ப்பை அவர் வழங்குவதற்கு முன்னதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சம்மந்தரும் தனித்தனியாக முதல்வரை தொடர்பு கொண்டு முடிவை மாற்றிக் கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் பாராதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளனர்.
இந்த அழுத்தங்களையெல்லாம் மீறியே முதலமைச்சர் மிகத்துணிச்சலுடன் தான் ஒரு நீதிபதி என்ற தொனியில் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தனது முடிவை அறிவித்திருந்தார். ஒரு அரசியல் வாதியாக தன் பின்னால் எத்தனை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் தனது முடிவை மிகச் துணிச்சலாக அறிவித்திருந்தார். ஒட்டுமொத்த அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் பணத்திலும், நிர்வாகத்திலும் செய்யப்பட்ட ஊழல் மோசடிகளுக்கு எதிராக இருப்பார்கள் என்று அவர் தனது அவை உறுப்பினர்களை நம்பியிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஊழலை விட பதவியே பெரிது என்றும் மக்களின் நம்பிக்கையை விட தங்களது கட்சியே பெரிது என்றும் செயற்பட்டு முதல்வருக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு மேலாக வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணி மீட்புக்காக போராடுகின்றவர்கள், வேலைவாய்ப்பு கோரி போராடுபவர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற இடங்களுக்கு ஒரு நாள் கூட செல்லாதவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்கள் வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களது துயரைப் போக்க வேண்டியது தமது கமடமை என்பதை உணராதவர்கள் தங்களைது கட்சியை காப்பாற்றுவதற்காக ஊழலையும் மறந்து அல்லது அதனை நியாயப்படுத்தி இரவோடு இரவாக முதலமைச்சருக்கு எதிராக ஆளுனரை சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர். இதன்போது தமது பலத்தை நிரூப்பிப்பதற்கு தென்னிலங்கை பெரும்பான்மைவாத தலைவர்களினால் வழிநடத்தப்படுகின்ற தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களது இந்த கைங்கரியத்தை நிறைவேற்ற முயல்கின்றனர். வடக்கின் முதலமைச்சரை நீக்க வேண்டும் என தென்னிலங்கையில் இனவாதிகளின் குரல்கள் வலுப்பெற்று வரும் நிலையில் அதன் ஊதுகுழல் போன்று தமிழரசுக் கட்சி செயற்பட்டிருக்கின்றது.
தேசியத்தை காப்பாற்றச் சென்றவர்கள் பெரும்பான்மை தேசியவாதத்தின் பிடிக்குள் சிக்கியிருப்பது தெரியாமலே அதன் வலைக்குள் விழுந்திருப்பது என்பது தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விடயமே. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வடமாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிகள் அரசின் சார்பில் போட்டியிட்டு ஒரு சில பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் செயற்பட்டனவோ அந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்து வந்த இ ஊழல்வாதிகளை வெளிப்படுத்தி முதலமைச்சரை பதவி நீக்க முயல்கிறார்கள். இந்த விடயத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. மாகாணசபையை வழிநடத்தியிருக்க வேண்டிய கூட்டமைப்பின் தலைமை தனது பொறுப்பை தட்டிக் கழித்து நிர்வாக சீர்கேடுகள் நடந்த பின்னர் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோருவது எந்த வகையில் நியாயமானது…?
அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் சாமாதான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்து எடுத்து முள்ளியவாய்கால் பேரவலம் நிகழ வழிவகுத்தது. அதே அரசாங்கம் இன்று தமிழரசுக் கட்சியைப் பயன்படுத்தி தமிழர் ஒற்றுமையை சீர்குலைத்து தமிழ தேசிய உரிமைப் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சில் ஈடுபட்டுள்ளது. ஐக்கியத்தைப் பற்றி பேசிய தமிழரசுக் கட்சி இன்று அரசுடன் இணைந்து ஒற்றுமைக்கும், தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குரல் கொடுத்து வரும் முதலமைச்சரை மௌனிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மக்களைப் பொறுத்தவரை ஏற்கனவே தலைமைகள் இன்றி தங்களது கோரிக்கைளை முன்வைத்து தாங்களே போராடுகின்ற நிலையில் இப்பொழுது தங்களுக்கு ஆதரவாக செயல்படும் முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்துவதற்கும் துணிந்து விட்டனர். இதற்கான வீதியில் இறங்கவும் தயாராகிவிட்டனர். இதனை வடக்கின் தற்போதைய நிலைகள் நன்கு வெளிப்படுத்துகின்றன. கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளான ஈபிஆர்எல்எப், புளொட் மற்றும் ரெலோ தமிழரசுக் கட்சியின் இந்த செயற்பாட்டை எதிர்த்து ஓரணியில் முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்து அணிதிரண்டுள்ளனர்.
இந்த பத்தி எழுதிக் கொண்டிருக்கிம் நேரத்தில் மக்களள் தமது போராட்ட வடிவங்களை தீர்மானிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமையையும், மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றிருப்பதன் காரணமாக சில பொது அமைப்புக்களும் சில அரசியல் கட்சிகளும் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்க்கமான நடவடிக்கைள் குறித்து சிந்திக்க தொடங்கியிருப்பதையும் காணமுடிந்தது. சரியான தருணத்தில் தவறான முடிவெடுப்பது என்பது தமிழ் தலைமைகளின் சாபக்கேடு. அதற்கு இன்றைய தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல.
N5




