முதலமைச்சர் விக்னேஸ்வரனின் லண்டன் பொதுக்கூட்டத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் (படங்கள்)
கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையை செய்வதற்காக லண்டன் சென்றிருந்த வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் நேற்று மாலை லண்டன் ஹரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 1000 க்கும் மேற்றப்பட்ட பிரித்தானியா வாழ் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனால் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்ற சொறஸ்ரிறியன் மையத்தின் அரங்கம் முழுமையாக நிரம்பி இருந்தது. கீழ் மற்றும் மேல் மாடிகளின் பொதுமக்களால் நிரம்பி வழிந்தது.
நேற்றைய தினம் முதலமைச்சரின் 77 ஆவது பிறந்த தினம் ஆகையால் அவரை கௌரவிக்கும் நிகழ்வுடன் அவரை வாழ்த்தி கவிதைகளும் பாடப்பட்டன. முதலமைச்சரை வரவேற்கும் நாட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
கூட்டத்தில் நீண்ட உரை ஆற்றிய முதலமைச்சர் தனது உரையின் முக்கிய கருப்பொருளாக உலக தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார். ” தமிழ்ப் பேசும் இனமானது எங்கிருந்தாலும் அதன் உறவுகளுக்குக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். பகைமை கடிந்து உலக ரீதியாக ஒற்றுமை வளர நாம் பாடுபட வேண்டும்.” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்”.
முதலமைச்சரின் உரையின் பின்னர் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பிரித்தானியாவில் செயற்படும் அமைப்புக்கள் பலவற்றின் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பிரித்தானியாவில் வாழும் சகல தமிழ் அமைப்புகளினதும் ஆதரவில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கக்து.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பிரித்தானியா வாழ் தமிழ் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் முதலமைச்சர் சந்திப்பொன்றை நடத்தி இருந்தார். பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடுசெய்த இந்த நிகழ்வில் சுமார் 100 க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு செயற்த்திட்டங்களை முன்னெடுக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.




























