”முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள்”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (21) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தல், நடைபெறவுள்ள ஏனைய தேர்தல்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னரே இந்தச் சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, இன்று (22) காலை அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதியை வழிபட வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
“எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பசில் சிறந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளார். முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள். இல்லையேல் ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்த கட்சிக்கு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும். நீதி கிடைக்க வேண்டுமானால் முதலில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்”. என குறிப்பிட்டார்.
-(3)




