செய்திகள்

முன்னாள் இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட சதியா? : அரசாங்கத்தின் விளக்கம்

அங்கவீனமுற்ற இராணுவத்தினரால் நேற்று கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்குமிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றே என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓய்வூதியம் வழங்கத் தகுதியான கால எல்லைக்கு முன்னதாக (12 வருடங்கள்) அங்கவீனமுற்ற நிலையில் சேவையில் இருந்து இடைவிலகிய முன்னாள் இராணுவ வீரர்கள் தமக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதல் இவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என நேற்றுமுன் தினம் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்றையதினமும் போராட்டங்களை மேற்கொண்டிருந்த முன்னாள் இராணுவத்தினர் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எது எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதிமொழியை அடுத்து அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமையானது, இது வெறும் அரசாங்க எதிர்ப்பு குழுக்களின் முயற்சி என்பதை காட்டுகிறது என, இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு எதிரான அரசியலில் ஈடுபடும் பிக்குகள் சிலர், வேறு சிலரின் தலையீட்டுடன் நேற்று ஏற்படுத்திய இந்த குழப்பநிலை, அரசியல் இலாபத்திற்காகவே என்பது தௌிவாகிறது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -(3)